ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்ரெட்டி, பா.ஜ.,வில் இணைந்தார். இது காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே அந்தோணி மகன் அனில் அந்தோணி நேற்று டெல்லியில் பா.ஜ.,வில் இணைந்தார். இது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகனின் முடிவுக்கு, அந்தோணி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதல்வராக இருந்த கிரண்குமார் ரெட்டி, டில்லியில் பாஜ.,வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ., மூத்த தலைவர்கள் முன்னிலையில், கிரண்குமார் கட்சியில் இணைந்தார். பிரதமர் மோடியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.,வில் இணைந்ததாக கூறியுள்ளார்.
62 வயதான கிரண்குமார் ரெட்டி, காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014ல் அக்கட்சியில் இருந்து விலகினார். பிறகு தனிக்கட்சி துவக்கி ஆந்திர மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அவரால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இதனால், கட்சியை விட்டு காங்கிரசில் இணைந்தாலும், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
அடுத்தாண்டு ஆந்திர சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆளும் ஓய்எஸ்ஆர்., காங்கிரஸ் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை தயாராகி வருகின்றன. கிரண்குமார் ரெட்டியின் வருகையால், ராயலசீமா பகுதியில் பா.ஜ., பலம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் 3வது பெரிய கட்சியாக வலுப்பெற்று வரும் பா.ஜ., வரும் சட்டசபை தேர்தலில் கிரண்குமார் ரெட்டி தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் காங்கிரசில் இருந்து வெளியேறி உள்ளது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.