ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாளை சென்னை விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை தொடங்கிவைக்கிறார். மாலை 4 மணியளவில் பிரதமர், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சென்னை-கோயம்புத்தூர் வந்தேபாரத் அதிவிரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இதர ரயில்வே திட்டங்களையும் அவர் தொடங்கிவைக்கிறார். மாலை 4.45 மணியளவில் பிரதமர், சென்னையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். மாலை 6.30 மணியளவில் சென்னை அல்ஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் 9-ந் தேதி காலை 7.15 மணிக்கு பிரதமர் பந்திப்பூர் புலிகள் சரணாலயம் செல்கிறார். முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் அவர் செல்வார். காலை 11 மணியளவில் பிரதமர், மைசூரு கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50-ம் ஆண்டை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்வார்.
தமிழ்நாட்டி திமுக ஆட்சி அமைந்த பின்னர் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முன்னரைப் போல பிரதமர் மோடிக்கு திமுக ஆட்சியில் கறுப்பு கொடி, கறுப்பு பலூன்கள் காட்டப்படவில்லை. இந்த நிலையில் காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் கறுப்பு கொடி காட்டுவோம் என திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் செல்லும் இடம் எங்கும் கறுப்பு கொடி காட்டுவோம் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. இதனை அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது இந்த தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். ஆனால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிராக காங்கிரஸ் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டுகிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.