தூத்துக்குடியில் போய் ஆளுநரை இதை பேச சொல்லுங்கள்: உதயநிதி ஸ்டாலின்!

ஆர்.என்.ரவி தூத்துக்குடி போய் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பேச முடியுமா என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் கொண்டு வரும் போது போராட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. வெளிநாட்டு நிதிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கும் இதுபோன்ற நிதிகளே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களைத் தூண்டிவிட்டு அந்த ஆலையை மூடிவிட்டனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் கருத்து தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதவது:-

ஆளுநரின் கருத்து குறித்து முதல்வர் தெளிவாக பதில் சொல்லிவிட்டார். டிக்டேர்ஷிப் மாதிரி ஆளுநர் நடந்து கொண்டு இருக்கிறார். இது கண்டனத்திற்குரியது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் கிட்டத்தட்ட 42 க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தீர்மானத்தை அனுப்பி வைக்கிறோம். நாங்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள். மாநில சுயாட்சிக்கு ஏற்பட்டுள்ள பெரிய இழுக்கு. இதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கையை விரைவில் எடுப்பார்” என்றார்.

அப்போது செய்தியாள்ர்கள் ஸ்டெர்லைட் போராட்டத்தை வெளிநாட்டில் இருந்து நிதியை பெற்றுக்கொண்டு தூண்டிவிட்டதாக ஆளுநர் சொல்லியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடிக்கு சென்று இதைப்போல பேச முடியுமா? ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு இப்படி பேசுகிறார். வெளியில் வந்து ஒரு பொதுக்கூட்டத்திலே மாணவர்கள் மத்தியிலோ.. தூத்துக்குடியிலோ இதே போன்று பேச முடியுமா? நான் சவால் விடுக்கிறேன். 100 நாட்கள் நடந்த ஒரு போராட்டம், மிகப்பெரிய போராட்டம். 13 பேரை சுட்டுக்கொன்று இருக்கிறார்கள். இது அதிமுகவும் சொன்னதுதானே.. அப்போது முதல்வராக இருந்தவர் என்ன சொன்னார்.. தெரியாது.. டிவியில் பார்த்தேன் என்று சொன்னார். இதுக்கும் அதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. இதை கண்டிக்கிறேன். தைரியமாக தூத்துக்குடியில் போய் இதை பேச முடியுமா என்று நான் ஆளுநரிடம் கேட்கிறேன். நீங்கள் ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் பேசுகிறீர்கள். இது வன்மையாக கண்டித்தக்கது. தூத்துக்குடியில் போய் ஆளுநரை இதை பேச சொல்லுங்கள். அப்போது மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்று தெரியும்” என்றார்.