அருணாசல பிரதேசத்திற்குள் சீனா வருவதை தடுத்து உள்ளோம்: நிர்மலா சீதாராமன்!

அருணாசல பிரதேசத்திற்குள் சீனா வருவதை தடுத்து நிறுத்தியுள்ளோம் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாட்டில் நெருக்கடி நிலையின்போது, நாடாளுமன்றத்தின் பதவி காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சிறையில் இருந்தபோது அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்தனர். எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அதானி ஆகியோரை சிறையில் அடைத்தனர். ஆனால் காங்கிரசார் இதை எல்லாம் மறந்துவிட்டு, ஜனநாயகம் குறித்து பேசுகிறார்கள். கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நான் கர்நாடகத்திற்கு வந்துள்ளேன். ஜி20 நாடுகள் சபையின் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட வெளிநாடுகளின் தலைவர்களுக்கு கர்நாடகத்தின் கலாசாரம், பண்பாடு, தொழில் வளம் குறித்து எடுத்து காட்டப்பட்டது. மோடி பிரதமரான பிறகு கர்நாடகத்திற்கு இதுவரை 32 முறை வந்துள்ளார். அதில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 7 முறை வந்து சென்றுள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி உள்ளதால், பிரதமர் அடிக்கடி கர்நாடகம் வந்து திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பா.ஜனதாவுக்கும், கர்நாடகத்திற்கும் இடையே பிணைப்பு உள்ளது.

1962-ம் ஆண்டு ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் பிரதமர் நேருவால் கைவிடப்பட்டன. ஆனால் நாங்கள் அருணாசல பிரதேசத்திற்குள் சீனா வருவதை தடுத்து நிறுத்தியுள்ளோம். இதற்காக நாங்கள் எடுத்த நடவடிக்கை பேசுகிறது. ஆனால் பிரதமர் மோடி பேசுவது இல்லை என்று காங்கிரஸ் சொல்கிறது. நமது முதல் பிரதமர் நேரு என்ன சொன்னார் என்பதை ராகுல் காந்தி ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அருணாசல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு நீங்கள் பயணித்தால், அங்குள்ள மக்களே இதுபற்றி சொல்வார்கள். அருணாசல பிரதேசம் இந்தியாவுடன் உள்ளது. அங்கிருந்த சீனர்கள் வெளியேறிவிட்டனர். இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை (ரெபோ ரேட்) மாற்றம் செய்யாமல் அதே நிலையை நீட்டித்து எடுத்துள்ள முடிவு நல்ல விஷயம். வட்டி வகிதம் தற்போது 6½ சதவீதமாக உள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.