ஆளுநர் உங்களின் தவறுகளுக்கு உடந்தையாக இல்லை என்றால் ராஜ் பவன் முற்றுகையா? என கூறியுள்ளார் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கண்டித்து வரும் 12ஆம் தேதி அன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர் . ஆளுநராக ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்கு வந்தது முதல் அவரின் பேச்சுக்கள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்கு உரியதாகவும், மர்மமானதாகவும் இருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதியாக தன்னை காட்டிக்கொள்ள துடிக்கிறார் என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சென்னை ராஜ் பவன் தர்பார் ஹாலில் நடந்த குடிமை பணி தேர்வர்களுடனான கலந்துரையாடலின் போது ஆளுநர்களின் அதிகாரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு ஆளுநர் அளித்த பதில் மீண்டும் விவாதமாக்கப்பட்டிருக்கிறது. சர்ச்சையாக்கப்பட்டு இருக்கிறது. பெரும் பேசும் பொருளாகி இருக்கிறது. ஆளுநர்கள் என்றாலே ராஜ் பவனுக்குள் முடங்கி கிடக்க வேண்டும், ஆண்டுக்கு இரண்டு முறை சட்டமன்றத்தில் சம்பிரதாயத்திற்காக உரை நிகழ்த்த வேண்டும், குடியரசு தின விழாவில் கொடியேற்ற வேண்டும் என்று மட்டுமே தமிழகத்தில் தவறான பார்வை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தை ஆழ்ந்து படிப்போர் அப்படி கருத மாட்டார்கள்.
அந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற ஆளுமை பதவிகளுக்கு வரும் தேர்வர்கள், இந்திய அரசியல் சாசனம், ஜனாதிபதி அதிகாரங்கள், ஆளுநர் அதிகாரங்கள், மத்திய மாநில அரசுகளின் உறவுகள், அதிகார வரம்புகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு ஆளுநரின் உச்சபட்ச பொறுப்பே அரசியல் சாசனத்தை கட்டி காப்பது என்பதையும் மத்திய அரசு மாநில அரசு எதுவாக இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும் என்றும் தெளிவாக ஆளுநர் விளக்கி இருக்கிறார். ஆளுநரின் அதிகாரமும், செயல்பாடுகளும் அரசியல் அமைப்போடு பின்னிப்பிணைந்தது என தெளிவுபடுத்துகிறார். ஜனாதிபதியும், ஆளுநரும், மாநில சட்டமன்றமும், இந்திய நாடாளுமன்றமும் இந்திய அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டுதான் நடக்க வேண்டும் என்பதை அவர் விளக்கி இருக்கிறார்.
எனவே ஆளுநர் மாணவர்கள் உடனான உரையாடலின் போது அரசியல் சாசனம் குறித்து விளக்கம் அளித்த ஒரு நிகழ்வை ஆளும் கட்சியும், அதன் கூட்டணி கட்சியினரும் அரசியல் கோணத்திலிருந்து அணுகுவது எவ்விதத்தில் நியாயம்? மாநில அரசு தனக்கு பெரும்பான்மை இருக்கின்ற ஒரே காரணத்திற்காக எந்த சட்டத்தை வேண்டுமென்றாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம்; அதற்கு இயந்திரத்தனமாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிக மிக தவறானது. அரசியல் சாசன விதிகளை ஆளுநர் விளக்கியதற்கு குதர்க்கமாக விளக்கங்களை கொடுப்பதும் உடனடியாக ஆளுநருக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு போராடுவதும் ஜனநாயக நடைமுறைகளா? இவர்கள் பேச, எழுத தேர்தலில் போட்டியிட வெற்றி பெற, பதவிகளை அனுபவிக்க வசதியாக அரசியல் சாசன உண்மைகளை பற்றி பேசுவார்கள். ஆனால் அவர்களின் அரசியல் சாசன வரம்பு மீறிய செயல்களை ஆளுநர் கண்காணித்தால், தவறுகளை சுட்டிக்காட்டினால், தவறுகளுக்கு உடந்தையாக இல்லை என்றால் ராஜ் பவன் முற்றுகையாம். இவர்களுக்கு இதற்கெல்லாம் எங்கிருந்து இந்த உரிமை வந்தது? யார் கொடுத்தது?. இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் கிருஷ்ணசாமி.