இது தமிழ்நாடு என்பதை ஆளும் ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்: சீமான்

மண்ணையும், மக்களையும் பாதிக்கக்கூடிய எதுவென்றாலும், தமிழர் நிலமும், இனமும் தன்னெழுச்சியாகப் போராடுமென்பதை இனியாவது ஆளும் ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் சீமான் கூறியுள்ளார்.

காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. இந்த நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட்டிருப்பதை சீமான் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கிற திட்டமானது ஒன்றிய அரசால் ஒட்டுமொத்தமாகக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது! தமிழர்களின் எதிர்ப்புணர்வுக்கு அடிபணிந்து திட்டத்தைச் செயல்படுத்துவதிலிருந்து பின்வாங்கியிருக்கும் பாஜக அரசின் கொள்கைமுடிவு காவிரிப்படுகை வேளாண்பெருங்குடி மக்களால் கொண்டாடத்தக்கது! இது தமிழர் நிலத்தின் மீது தொடுக்கப்படும் நிலவியல் போருக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த இனமானத்தமிழர்களுக்கும், மண்ணின் மக்களுக்கும் கிடைத்த பெருவெற்றி! மண்ணையும், மக்களையும் பாதிக்கக்கூடிய எதுவென்றாலும், தமிழர் நிலமும், இனமும் தன்னெழுச்சியாகப் போராடுமென்பதை இனியாவது ஆளும் ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்! ஏனென்றால், இது தமிழ்நாடு. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.