ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை பிரகாசமாக்குவதற்காக அதானி விவகாரம் வேண்டுமென்றே எழுப்பப்படுவதாக மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
அதானி நிறுவனங்கள் தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்து உள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஜம்முவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஹிண்டன்பர்க்-அதானி விவகாரத்தில் நான் எந்த கருத்தும் கூறமாட்டேன். ஏனெனில் இந்த விவகாரத்தில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு கமிட்டி ஒன்றை அமைத்து விசாரித்து வருகிறது. அதேநேரம் அரசியல் ரீதியாக தோல்வியடைந்திருக்கும் ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை பிரகாசமாக்குவதற்காகவே இந்த விவகாரம் எழுப்பப்படுகிறது. அதற்காக, வேண்டுமென்றே இதை பிரச்சினையாக்குகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி விரக்தியில் உள்ளது, நீதித்துறையை தாக்குகிறது. நீதித்துறையினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பது காங்கிரஸ் கட்சியின் பழக்கம். 1975-ம் ஆண்டு அவசர நிலை கொண்டு வரப்படுவதற்கு முன்னர் கூட காங்கிரஸ் தலைவர்கள் நீதித்துறையை அச்சுறுத்தி வந்தனர். இன்னும் இதுபோன்ற தாக்குதலை நடத்துவார்கள். ஏனெனில் அவர்கள் விரக்தியில் உள்ளனர். அமைதியாக இருக்கமாட்டோம் ஆனால் நாங்கள் அரசியலமைப்பைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் அரசியல் சாசனத்தை அழிக்க முயற்சித்தால், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதுபோல, இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இல்லை. மாறாக குடும்ப அரசியலுடன் தொடர்புடைய ஒரு நபர்தான் ஆபத்தில் இருக்கிறார். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.
இந்நிலையில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார். ராம்பான் அருகே சென்று கொண்டிருந்தபோது லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கார் மீது மோதியது. இதையடுத்து பாதுகாப்பு போலீசார் மந்திரியை காரிலிருந்து பத்திரமாக வெளியேற்றினர். இந்த விபத்தில் மந்திரி கிரண் ரிஜிஜு அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். மத்திய மந்திரி சென்ற கார் விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.