காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு!

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸார் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பலூன்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் சென்னைக்கு ஒருநாள் பயணமாக வந்தார். சென்னை உலக தரத்தில் கட்டப்பட்டுள்ள சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதுதவிர மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மோடி கட்டி முடிக்கப்பட்ட பாலம், சாலைகளையும் கணொலி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மோடி பெயர் சர்ச்சையில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர். தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதன் ஒருபகுதியாக நேற்று பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி, கருப்பு பலூன் பறக்கவிட காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்தனர். இதை முன்கூட்டியே அறிந்த போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கருப்பு பலூன்களை பறிமுதல் செய்தனர். இருப்பினும் கூட பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பலரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். கலைந்து செல்ல கூறியும் காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து செல்வில்லை. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரதமர் மோடி வரும் சமயத்தில் இந்த சம்பவம் நடந்தது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் சென்னை வள்ளளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உள்பட 600 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்த பாதுகாப்பு பணியில் மொத்தம் 22 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.