இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும்: அன்புமணி

இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும் என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இதனை தடை செய்யக்கோரி சட்டப்பேரவையில் அவசர சட்டமாக கொண்டு வந்து மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் அது தொடர்பாக விளக்கங்கள் கேட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக 24 மணி நேரத்திற்குள் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 131 நாட்கள் கிடப்பில் போட்டு ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது பெரும் சர்ச்சையான நிலையில், ஆன்லைன் தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். கடந்த மார்ச் மாதம் இரண்டாவது முறையாக ஆன்லைன் தடை சட்டமசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவந்த நிலையில், ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்தது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவீட் செய்துள்ளார். அதில், ‘இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும். ஆளுநரின் முடிவு மிக தாமதமானது என்றாலும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை தடுக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது. 2022 ஆகஸ்ட் 19-ல் நிறைவேற்றிய சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தந்திருந்தால் 21 தற்கொலைகளை தவிர்த்திருக்க முடியும். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு எதிராக உள்ள வழக்குகளை முறியடிக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.