சிஆர்பிஎப் ஆள் சேர்ப்பு குறித்து தவறான தகவல்களை கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ஃபேஸ்புக் பதிவில், ‘‘மத்திய பின்னிருப்புக் காவல் படையில் (CRPF) ஆட் சேர்க்கைக்கான அறிவிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். சிஆர்பிஎப் ஆள் சேர்ப்புக்கான கணினி தேர்வு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இது தமிழக இளைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தாய்மொழியில் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இது ஹிந்தி பேசுவோருக்கு சாதகமானதாகவும், பாகுபாடு காட்டக்கூடியதாகவும் அமைந்துள்ளது என்றும், துணை ரானுப்படையில் தமிழர்கள் பணியாற்றும் வாய்ப்பை பறிக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு உள்ளதாகவும், அரசியலமைப்பு வழங்கி உள்ள உரிமையை பாதிப்பதாகவும் சமவாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளில், குறிப்பாக 2004-2014 வரையிலான சிஆர்பிஎப் ஆள் சேர்ப்புக்கான அறிவிக்கைகளை ஆராய்ந்து பார்த்த போது, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில், (உள்துறை இணை அமைச்சராக திமுகவைச் சேர்ந்தவர் இருந்த போதும்) சிஆர்பிஎப் ஆள் சேர்ப்பு தேர்வுகளில் இதே விதிகள் தான் கடைபிடிக்கப்பட்டு வந்தன என்பதை மு.க.ஸ்டாலின் அறிவாரா? அந்த பத்து வருடங்களில் நடைபெற்ற கணினி தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்பட்டபோது தமிழக இளைஞர்கள் ஏன் அதிர்ச்சிக்குள்ளாகவில்லை? என்பதையும், சொந்த மாநிலத்திலேயே தாய் மொழியில் தேர்வை எழுத முடியாத நிலை ஏன் ஏற்பட்டது? என்பதையும், ஹிந்தி பேசுவோருக்கு சாதகமாக திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து கொண்டது ஏன்? என்பதையும் முதல்வர் விளக்க வேண்டும்.
அன்று பாகுபாடு காட்டியது ஏன்? என்பதையும், திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது தமிழர்கள் துணை ராணுவப்படையில் பணியாற்றும் வாய்ப்பை பறித்தது ஏன்? என்பதையும், அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையை பாதித்து சமவாய்ப்பை மறுத்தது ஏன்? என்பதையும் தமிழக முதலமைச்சர் விளக்க வேண்டும். மேலும், சிஆர்பிஎப் அறிவிக்கையில், மறைமுக அம்சமாக 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் ஹிந்தி மொழியில் அடிப்படை புரிதலுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆனால், அப்படி எந்த ஒரு அம்சமும் இந்த அறிவிக்கையில் காணப்படவில்லை என்பதோடு, ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் அடிப்படை புரிதலுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அம்சமும் நீண்ட நெடுங்காலமாக, இதே நிலை தான் நீடித்தது என்பதை முதல்வர் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளதால், அலுவல் மொழியான ஹிந்தியிலோ அல்லது இணைப்பு மொழியான ஆங்கிலத்திலோ அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும் என்பதாலேயே இந்த அறிவிக்கை என்பதையும் தெளிவுபட குறிப்பிட்டுள்ளது.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழக இளைஞர்கள் குறித்து கவலைப்படாத, தமிழ் மொழி இல்லாதது குறித்து வருந்தாத, அரசியலமைப்பு உரிமையை தட்டி பறித்ததை உணராத மு.க.ஸ்டாலின், தற்போது தமிழுக்காக, தமிழர்களுக்காக உருகுவது ஏன்? அரசியல் உள்நோக்கம் தானே? காழ்ப்புணர்ச்சி தானே? இன்று கேட்பது சரியென்றால், அன்று மத்தியில் திமுக ஆட்சியில் இருந்த போது தமிழர்களை வஞ்சித்து தவறு தானே? அதற்கு தமிழர்களிடம் மன்னிப்பு கேட்பாரா முதல்வர் ஸ்டாலின்? அல்லது எதற்கெடுத்தாலும் மொழி அரசியல் செய்து மக்களை தூண்டுவதை நிறுத்திக் கொள்வாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.