பிபிசி தொலைக்காட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தை மையமாக வைத்து, பிபிசி தொலைக்காட்சி ஒரு ஆவணப்படத்தை இரு பாகங்களாக தயாரித்து அண்மையில் வெளியிட்டது. அந்த ஆவணப்படங்களில், குஜராத் கலவரத்துக்கும், அம்மாநிலத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும் தொடர்பு இருப்பது போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்டுகிறது. இது பாஜகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிபிசியின் இந்த ஆவணப்படத்தை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிய மத்திய அரசு, நாட்டின் எந்தப் பகுதியிலும் அதை திரையிடுவதற்கும் தடை விதித்தது. இந்த தடையை மீறி பல அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் இந்த ஆவணப்படத்தை திரையிட்டன. இதுதொடர்பாக பல கைது நடவடிக்கைகளும் அரங்கேறின.
இதனிடையே, இந்த ஆவணப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பிபிசி தொலைக்காட்சி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களுக்கு மேலாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, இந்த ஐடி சோதனையானது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் விவாதம் நடந்தது.
இந்நிலையில், வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனையில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்தியாவில் செயல்படும் பிபிசி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பபட்ட நிதிக்கு முறையாக வரி செலுத்தப்படவில்லை என மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சர்வதேச ஊடகமான பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, வெளிநாட்டு நிதி, வரி செலுத்திய ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பிபிசி நிர்வாகத்திடம் அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.