தமிழ்நாடு காவல்துறை ஏப்ரல் 16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அனுமதி கேட்ட 45 இடங்களிலும் பேரணி நடத்த காவல் துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தனி நீதிபதி அமர்வில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதில், 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாகவும், 6 இடங்களில் ஊர்வலமாகவும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேல்முறையீடு செய்தது. அப்போது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையை அரசு தடுக்கக் கூடாது. பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை. பிரச்சினைகள் உள்ள இடங்களில் மட்டும் அனுமதி மறுத்து உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தமிழக அரசின் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல் துறையிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனுமதி கேட்ட நிலையில் அனுமதி கேட்ட 45 இடங்களிலும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது.