அண்ணாமலை கூறும்போது சாப்பிடுவது அவர் போடுகிறார். கண்ணாடி மக்கள் கொடுத்தது. பேனா இவர் கொடுத்தது. இதுதான் அவருக்கு சொந்தம். மூளையாவது சொந்தமானதா என்று தோன்றுகிறது என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
அண்ணாமலைக்கு பதில் அளித்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று காலையில் தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சொன்னார். 1972-ல் எம்.ஜி.ஆர். ஊழல் குற்றச்சாட்டுகளை கவர்னரிடம் கொடுத்ததை குறித்து கருணாநிதி சட்டமன்றத்தில் வரிக்கு வரி பதில் சொன்னார். அந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன் என்று சொன்னார். அதுபோல இன்றைக்கு அண்ணாமலை சொல்லி இருப்பதை பார்க்கும் போது சிரிக்கத்தான் தோன்றுகிறது. அவருடைய அறியாமையை பார்த்து இப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஐ.பி.எஸ். எழுதி பாஸ் செய்தார். எப்படி அவரை போலீஸ் துறையில் இவ்வளவு நாள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகம் வருகிறது.
எம்.ஜி.ஆரே எங்கள் மீது புகார் கொடுத்த போது அண்ணாசாலையில் உள்ள அண்ணா தியேட்டர் கருணாநிதிக்கு சொந்தம் என்று கையெழுத்து போட்டு கவர்னரிடம் புகார் கொடுத்தார். அந்த தியேட்டர் ஒரு இஸ்லாமிய தோழர்களுக்கு சொந்தம். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அருண் ஓட்டல் இருந்தது. அந்த ஓட்டல் கருணாநிதிக்கு சொந்தம் என்று எம்.ஜி.ஆர். கையெழுத்து போட்டு கவர்னரிடம் கொடுத்தார். அது அவருக்கு சொந்தமில்லை. அதே போல்தான் அண்ணாமலை யார் யாருக்கோ சொந்தமானதையெல்லாம் இவர்களுக்கு சொந்தம் என்று எழுதி கொடுத்து இருக்கிறார். அதில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயமாக பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள். அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைப்பார்கள்.
அண்ணாமலை ரபேல் கை கடிகாரத்துக்கு ஒரு சீட்டை காட்டி மோசடி செய்து விட்டார். ஜெகத்ரட்சகன் மீது குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். அவர் பல ஆண்டுகளாக தொழில் துறையில் இருப்பதால் ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கும் வருமான வரித்துறை உள்ளிட்ட துறைகள் எல்லாமே மோடியின் கையில் இருப்பதுதான் வேடிக்கை. நாங்கள் திறந்த புத்தகம். எங்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. தி.மு.க. இதுபோன்ற பல குற்றச்சாட்டுகளை சந்தித்து இருக்கிறது. நான் சவால் விட்டு சொல்கிறேன். தி.மு.க. 6 முறை ஆட்சியில் இருந்து உள்ளது. ஊழல் குற்றச்சாட்டு சொன்னார்கள். யாராவது ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபித்தது உண்டா? எம்.ஜி.ஆர். எங்கள் மீது குற்றச்சாட்டு சொன்னார். 10 வருடம் அவர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார். போலீசை தன் கையில் வைத்திருந்தார். லஞ்ச ஒழிப்பு துறையை கையில் வைத்து இருந்தார். அவர் சொன்ன ஒரு குற்றச்சாட்டையாவது நீதிமன்றத்தில் நிரூபிக்க முடிந்ததா? அப்படி நிரூபிக்க முடியாததால் தான் எங்களை சட்டமன்ற கட்சி அலுவலகத்தில் இருந்து காலி செய்து வெளியே அனுப்பினார். 10 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறித்தார். ஆனால் எங்கள் மீது வழக்கு போட அவரால் முடியவில்லை. காரணம் அதை நிரூபிக்க அவர்களால் முடியவில்லை.
அதன் பிறகு வந்த ஜெயலலிதா கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்து பாலம் ஊழல் வழக்கு போட்டார். மு.க.ஸ்டாலினை கடலூர் சிறையில் வைத்தார். 10 வருடம் ஆட்சியில் இருந்தார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. நான் சவால் விட்டு கேட்கிறேன் எங்களை விட, ஜெயலலிதாவைவிட அண்ணாமலை அறிவார்ந்த மேதையல்ல. ரூ.1408.97 கோடி என்கிறார். இந்த 1408 கோடி ரூபாய் சொத்துக்கான பத்திரங்களை இன்று முதல் 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும். எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். தி.மு.க.வுக்கு சொந்தமான பள்ளிகள் 3418 கோடி ரூபாய்க்கு இருக்கிறது என்கிறார். அந்த பள்ளிகள் எங்கெங்கு இருக்கிறது என்பதை பேர் பட்டியலோடு வெளியிட்டு அதற்குரிய மொத்த ஆவணங்களையும் எங்களிடம் உடனடியாக 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். தி.மு.க. நடத்தியதாக கூறும் கல்லூரிகளுக்கான ஆவணங்களையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதானியின் ஊழலை பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எழுப்பினார்கள். அதற்கு பதில் சொல்ல ஒரு நாள் கூட சபையை கூட்டவில்லை. ரூ.20 ஆயிரம் கோடியை செல் கம்பெனியில் மோடி போட்டார் என்று ராகுல் உள்ளிட்ட எல்லோரும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள். அதற்கு பதில் சொல்லவில்லை. இதில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்கள் ஆருத்ராவில் முதலீடு செய்து விட்டு வயிற்றெரிச்சலடன் இருக்கிறார்கள். அவர்கள் பா.ஜனதா அலுவலகமான கமலாயத்துக்கும் சென்று மறியல் செய்தனர். ரூ.2 ஆயிரம் கோடி ஊழலில் பல கோடி ரூபாய் அண்ணாமலை நேரடியாக பெற்றிருக்கிறார். ரூ.84 கோடியை நேரடியாக இவருக்கும், இவரது சகோதரருக்கும் கொடுத்ததாக அவர்களின் கட்சியில் இருப்பவர்களே சொல்லி இருக்கிறார்கள். அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் இருக்க கூடிய குற்றச்சாட்டை திசை திருப்புவதற்காக அண்ணாமலை நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.
நான் அவருக்கு ஒன்றை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வில் இருப்பவர்களை பொருத்தமட்டில் தங்கள் மடியில் கணமில்லை. வழியில் எங்களுக்கு பயமில்லை. இன்னும் சவால் விட்டே சொல்கிறேன். அண்ணாமலை கூறும்போது சாப்பிடுவது அவர் போடுகிறார். கண்ணாடி மக்கள் கொடுத்தது. பேனா இவர் கொடுத்தது. இதுதான் அவருக்கு சொந்தம். மூளையாவது சொந்தமானதா என்று தோன்றுகிறது. இதை பொதுமக்கள் கேட்கிறார்கள். அவருக்கு நெருக்கடி ஏற்பட்டு விட்டது. 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைவராக அண்ணாமலை இருந்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.