கே.எஸ்.அழகிரி மகள் கல்யாணம்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தனது மகள் திருமணத்தை ஒட்டி அதற்கான திருமண வரவேற்பு அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை தனது மகள் திருமணத்தை எளிமையாக நடத்துகிறார். மிக நெருங்கிய குடும்ப உறவுகளுக்கும் மட்டும் இதற்கான அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அதே வேளையில் திருமண வரவேற்புக்கான விழாவை சற்று விமரிசையாக நடத்த திட்டமிட்டுள்ள கே.எஸ்.அழகிரி, இதற்கான அழைப்பிதழை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் டெல்லி மேலிடத் தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

அந்த வரிசையில் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று அவரது முகாம் அலுவலகத்தில் கட்சியினருடன் சென்று நேரில் சந்தித்து தனது மகள் திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினும் இந்த விழாவில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார். வரும் 25ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வரவேற்பு விழா நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்களை பொறுத்தவரை தங்கள் குடும்ப இல்ல விழாக்களுக்கு முதல்வருக்கு அழைப்பிதழ் கொடுக்கச் செல்லும் போது குடும்பத்தினரை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் கே.எஸ்.அழகிரியோ கட்சியினரை அழைத்துச் சென்று பழக்கூடையுடன் பத்திரிகை வைத்திருக்கிறார்.