ஓ பன்னீர் செல்வம் திருச்சியில் நடத்தும் மாநாட்டால் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் பணத்தை செலவு செய்து ஒரு பிம்பத்தை வேண்டும் என்றால் ஏற்படுத்தலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: –
எதிர்க்கட்சிகளை சட்டப்பேரவையில் பேச அனுமதிப்பது இல்லை. சபாநாயகர் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார். முதல்வர் பேசுவதையும் அமைச்சர் பேசுவதையும் வேடிக்கை பார்ப்பதைத்தான் பார்க்க நாங்கள் போக வேண்டுமா? ஆகவே இன்னைக்கு ஜனநாயகம் செத்துப்போச்சு, கருத்து சுதந்திரம் பறிக்கப்படுது என்பதைக் காட்ட ஜனநாயக ரீதியில் வாயில் கருப்புத்துணி கட்டி எதிர்ப்பு தெரிவித்தோம். அதை பேரவைத்தலைவர் கொச்சைப்படுத்துகிறார். ஆளும் கட்சிக்கு ஜால்ரா தட்டும் பேரவைத்தலைவரை மாநிலம் பெற்றிருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது.
கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து 16 ஆம் தேதி செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். ஓபிஎஸ்சை பொறுத்தவரை வழக்குகள் மூலம் இழுத்தடித்து அதன்மூலம் கட்சியை பலவீனப்படுத்த வேண்டும்.. கட்சியை செயல்படவிடாமல் ஆக்க வேண்டும் என்ற அடிப்படையில் வழக்குகள் மேல் வழக்குகள் போடுகிறார். நாங்கள் சட்ட ரீதியில் செல்வதால் எங்களுக்கு பாதிப்பும் இருக்காது.. நிச்சயம் நல்ல நியாயம் கிடைக்கும். எங்கே பார்த்தாலும் மின் தடை ஏற்படுகிறது. மக்கள் சிரமப்படுகிறார்கள். ஒரு பக்கம் தங்கு தடையின்றி மின்சாரம் கொடுப்பதாக சொல்கிறார்கள். எங்கே கொடுக்கப்படுகிறது. எங்கள் ஆட்சியில் தான் கொடுக்கப்பட்டது. மின் உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் இல்லை.
தமிழகத்தில் மருத்துவத்துறை ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. அமைச்சர் சுப்பிரமணியனை டிவியில் மட்டும் பார்க்கலாம். அரசு மருத்துவமனை மீதான நம்பிக்கையே இந்த ஆட்சியில் போய்விட்டது. தமிழ்நாட்டில் மருத்துவத்துறை உறங்கிக் கொண்டுதான் உள்ளது. விழிப்பாக இல்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாட்டில் இருந்து தவறான சிகிச்சை.. நிர்வாக சீர்கேடு என சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் அனைவரும் பேச மட்டும்தான் செய்கின்றனர். செயல்பாடு எதுவும் இல்லை.
ஓ பன்னீர் செல்வம் மாநாடு நடத்துவதால் எந்த தாக்கமும் ஏற்பட போவது இல்லை. அவர் தனிக்கட்சி ஆரம்பித்து விடலாம். அவர் குழுவாக இருக்கிறார். கட்சி என்று கூட சொல்ல மாட்டேன். 4 பேர்தான் இருக்கிறார்கள். அதனால், அது பெரிய அளவுக்கு போர்ஸ் இல்லை. பணத்தை செலவும் பண்ணி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தலாம். அதனால் எந்த ஒரு தாக்கமும் ஏற்படாது. ஒன்றரை கோடி பேர் ஒற்றுமையாக இருக்கிறோம். எடப்பாடி தலைமையில் கட்சி சீராக சென்று கொண்டிருக்கிறது. விஜய் அரசியலுக்கு வரட்டும். நான் வரக்கூடாது என்று சொல்ல முடியுமா? அதனால் என்ன.. ஜனநாயக ரீதியில் யார் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம். நானும் குதிக்கிறேன் குதிக்கிறேன் என்று சொல்லக்கூடாது. வந்து பார்க்கட்டும்..எவ்ளோ கஷ்டம் நஷ்டம் இருக்கு என்று. அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடுவது நல்ல விஷயம்தான். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.