உணவு முறையில் சிறுதானியங்கள் என்பதை புத்தாண்டு சபதமாக ஏற்க வேண்டும்: பிரதமர் மோடி

பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததோடு உணவு முறையில் சிறுதானியங்கள் என்பதை புத்தாண்டு சபதமாக ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.

தலைநகர் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நேற்று தமிழ்புத்தாண்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். தமிழ் பாரம்பரிய படி பட்டு வேட்டி, சட்டை துண்டு அணிந்தபடி இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர்கள் தமிழிசை சவுந்தரராஜன், சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

உலகிலேயே மிகவும் பழமையான மொழியாக இருக்கும் தமிழ் ஒவ்வொரு இந்தியரின் பெருமையாகும். தமிழ் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் முன்னெடுத்து செல்வது நம் நாட்டின் கடமைகளில் ஒன்றாகும். நான் தற்போது அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளேன். மக்கள் தங்கள் உணவுமுறையில் சிறுதானியங்களை கொண்டுவருவதில் இந்த புத்தாண்டு சபதமாக ஏற்க வேண்டும்.

பண்டைய தமிழ்க் கலாசாரமும், புத்தாண்டில் புது சக்தி பெறுவதும் சிறந்தவை. இதுதான் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் மிகவும் சிறப்பானவர்களாக ஆக்குகிறது. அதன் காரணமாகவே, நான் எப்போதும் தமிழ் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டுள்ளேன். தமிழ் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவது எனக்கு புதிய சக்தியை தருகிறது. தமிழ் மொழி குறித்து நான் ஐக்கிய நாடுகள் அவையில் பேசியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.