ஊழலுக்கு எதிரான பயணம் தொடரும்: அண்ணாமலை

தமிழகத்தில் ஊழலை முற்றிலுமாக வேரறுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. ஊழலுக்கு எதிரான பயணம் தொடரும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சென்னை தி.நகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் இன்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளின் சொத்துப்பட்டியலை அவர் வெளியிட்டார். இதுதொடர்பாக ஒருமணிநேரம் விரிவாக விளக்கி பேட்டி அளித்ததுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அண்ணாமலை கூறியதாவது:-

தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெகத்ரட்சகன் ரூ.50,219.37 கோடி சொத்துக்களை குவித்துள்ளார். எ.வ. வேலுவுக்கு சொந்தமாக ரூ.5442.39 கோடிக்கும், கே.என். நேருவுக்கு ரூ.2,495.14 கோடியும் சொத்துக்கள் உள்ளன. பொன்முடி ரூ.581 கோடி சொத்துக்களையும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1000 கோடி சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளனர். தி.மு.க. அமைச்சரான உதயநிதிக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கும், கனிமொழிக்கு ரூ.830.33 கோடி அளவுக்கும் சொத்துக்கள் உள்ளன. கலாநிதிமாறனுக்கு ரூ.12,450 கோடி சொத்துக்களும், டி.ஆர்.பாலுவுக்கு ரூ.10,840 கோடி சொத்துக்களும் இருக்கின்றன. தி.மு.க. மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு ரூ.579.18 கோடியும், கலாநிதி வீராசாமி எம்.பி.க்கு ரூ.2,923 கோடியும், சபரீசனுக்கு ரூ.902 கோடியும், சொத்துக்கள் உள்ளன. இதனை வீடியோவாக வெளியிடுகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி தி.மு.க. பிரமுகர்களின் சொத்துப்பட்டியல் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி என்கிற அளவில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஆண்டு வருவாய் மதிப்பை விட தி.மு.க.வினரின் பினாமி சொத்துக்களின் மதிப்பு அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யிடம் நேரில் புகார் அளிக்க உள்ளேன். தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தி.மு.க.வினரின் முதல்கட்ட சொத்து பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளேன். அடுத்தடுத்து மேலும் பலரின் சொத்து விவரங்களை வெளியிட உள்ளேன். சொத்து பட்டியல் 4 பாகங்களாக உள்ளன. அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன். தமிழகத்தில் ஊழலை முற்றிலுமாக வேரறுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. ஊழலுக்கு எதிரான இந்த பயணம் தொடரும்.

நான் கட்டியிருக்கும் கைக் கடிகாரத்தில் இருந்து தான் பிரச்சினை ஆரம்பித்தது. தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள் என்னைப் பற்றி அவதூறுகளை பரப்ப ஆரம்பித்தார்கள். நான் பெங்களூரில் வேலை பார்த்த போது பெறப்பட்ட லஞ்சப் பணத்தில் இந்த கைக் கடிகாரத்தை வாங்கி இருக்கிறேன் என்றார்கள். அப்போது நான் தி.மு.க.வுக்கு ஒரு சவால் வைத்தேன். நான் என்னுடைய வாட்சுக்கான பில்லை கொடுக்கும் போது பில்லை மட்டும் கொடுக்கப்போவது கிடையாது. அதனுடன் சில கேள்விகளையும் வைக்கப் போகிறேன் என்றேன். இது நான் கேள்வி கேட்க வேண்டிய நேரம். நான் பட்டியல் வெளியிட்ட பிறகு நீங்கள் அது சரிதானா என்பதை பரிசோதித்து பாருங்கள். அதன் பிறகு 1 வாரம் கழித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறேன்.

ஒரு சாமானியன் அரசியலில் இருப்பது கடினமான வேலை. எந்த சாமானியனாக இருந்தாலும் சரி, அதில் முதல் தலைமுறை சமானியனாக இருந்தால் எண்ணற்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஏனென்றால் அவர்களுக்கு முன்பு பாதை இல்லை. யாரும் பாதை போடவில்லை. அந்த பாதையை உருவாக்க வேண்டிய கட்டாயம் முதல் தலைமுறை சாமானியனுக்கு இருக்கிறது. அது அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, தொழில் அதிபராக இருந்தாலும் சரி. அந்த பிரச்சினைதான் எனக்கு இருக்கிறது. நான் அரசியலுக்கு வந்து விட்டேன். எனது குடும்பத்தில் யாரும் அரசியல்வாதி இல்லை. எனக்கென்று ஒரு பாதையை போடவில்லை. 3 தலைமுறை அரசியல் இல்லை. என்னை பாதுகாக்க யாரும் இல்லை. நட்புக்கள் இல்லை. என்னை பாதுகாப்பாக கரம்பிடித்து அரசியல் வழி நடத்தி செல்வதற்கு கூட யாரும் இல்லை. ஒரு கட்சி, ஒரு கொள்கை, அதில் உள்ள தலைவர்களை நம்பி தான் நம்முடைய பயணம் இருந்து கொண்டிருக்கிறது.

அரசியல்வாதியாக ஒரு மாதத்திற்கு எனக்கு பல லட்சம் ரூபாய் செலவாகிறது. ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை ஒரு மாநில தலைவராக எனக்கு செலவாகிறது. என்னுடைய சம்பாத்தியத்தில் 8 லட்சம் ரூபாய் பார்க்க முடியாது. நண்பர்களின் உதவி, கட்சியின் உதவியை வைத்து சமாளித்துக் கொண்டிருக்கிறேன். காருக்கு டீசலை கட்சி கொடுக்கிறது. பாதுகாப்புக்காக பெரிய வீட்டுக்கு சென்றதால் அதற்கான வாடகையை இன்னொருவர் கொடுக்கிறார். பல நல்ல மனிதர்களின் உதவியோடுதான் அரசியல் வாழ்க்கையை நகர்த்த முடிகிறது. இது எனக்கு இருக்கக்கூடிய பிரச்சினை. நான் நண்பர் ஒருவரின் காரை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். என் 3 உதவியாளர்களுக்கு நண்பர்கள் சம்பளம் கொடுக்கிறார்கள். நான் ஐ.பி.எஸ். அதிகாரியாக முதல் முறை வாங்கிய சம்பளத்தில் இருந்து அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் போட்டு விடுவேன்.

எம்.பி.ஏ. முடித்த பிறகு என்னுடைய 11 லட்சம் ரூபாய் கடனை கட்ட 7 ஆண்டுகள் சிரமப்பட்டேன். நான் ஒரு வாட்சை 2 ஆண்டுகளாக கட்டிக்கொண்டிருக்கிறேன். 3 லட்சம் ரூபாய்க்கு இந்த வாட்சை வாங்கி இருக்கிறேன். விலையை தாண்டி இதன் காரணத்துக்காக இந்த வாட்சை கட்டி இருக்கிறேன். எனது வாட்சுக்குக்கான பில்லை நான் காட்டுகிறேன் பாருங்கள். ரபேல் வாட்ச் வரிசையில் 147-வது வாட்சை நான் வாங்கினேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரபேல் வாட்சை நான் வாங்கினேன்.

சென்னை-கோவை இரண்டுமே ஆங்கிலேயர் வசதிக்காக வடிவமைக்கப்பட்ட நகரங்கள். தமிழகத்தின் 65 சதவீத பொருளாதாரம் இந்த இரு நகரம் மூலமே கிடைக்கிறது. திராவிட கட்சிகள் பல ஆண்டுகள் ஆட்சி செய்து வேறு எந்த பகுதியும் வளரவில்லை. அப்புறம் என்ன திராவிட மாடல். தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும். தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024-ல் ஆண்டுக்குள் வெளியிடப்படும். தி.மு.க. மீது மட்டுமல்ல. 2024-ம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்க்க நான் தயார். ஊழல் பட்டியலை 4 பகுதிகளாக வெளியிடுவேன். வேறு வேறு கட்சிகளும் அதில் இடம்பெறும். தி.மு.க.வினரின் கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துக்களின் பட்டியலை பகுதி 2-ல் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.