சிஏபிஎப் தேர்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும்: மத்திய உள்துறை அமைச்சகம்!

மத்திய ஆயுத போலீஸ் படைகள்( சிஏபிஎப்) தேர்வு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட ஆயுதப்படைகளை உள்ளடக்கிய சி.ஏ.பி.எப். (CAPF) அமைப்பிற்கு ஆட்களை தேர்வு செய்ய எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. சிஆர்பிஎப் தேர்வை தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மத்திய ஆயுத போலீஸ் படைகள்( சிஏபிஎப்) தேர்வு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். நாடு முழுவதும் 15 மொழிகளில் 2024 ஜனவரி 1ம் தேதி முதல் சிஏபிஎப் தேர்வு நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மத்திய காவல்படை சிஏபிஎப் தேர்வை 13 மொழிகளில் எழுதலாம் என்ற உத்தரவை வழங்கிய பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றி. இந்த அறிவிப்பு பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மக்களுக்கான அரசின் உறுதிப்பாட்டை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தை இன்று (ஏப்ரல் 15) மீண்டும் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், “மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தின் விளைவாக ஒன்றிய அரசு அனைத்து மாநில மொழிகளிலும் சிஏபிஎப் தேர்வுகளை நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். மேலும் அனைத்து ஒன்றிய அரசு தேர்வுகளிலும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் வினாத்தாள்களை வழங்குவதற்கான எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.