மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற ஏப்ரல் 16ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லியில் இப்போது அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அங்குத் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா மீது மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஊழல் புகார் வைக்கப்பட்டது. அதாவது மதுபான விற்பனையில் தனியாருக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான இவர், 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். இதனிடையே இதே விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் முதல்வர் பதவியில் இருப்பவர் விசாரணை அமைப்பால் விசாரணைக்கு அழைக்கப்படுவது இதுவே முதல்முறை. டெல்லி முதல்வரிடம் மதுபான கொள்கை குறித்து விசாரணை நடத்த புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இதுவரை அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து எதுவும் கூறவில்லை. இருப்பினும், கடந்த காலங்களில் மதுபான ஊழல் என்று எதுவும் நடக்கவில்லை என்றும் இது மத்திய அரசின் பழிவாங்கல் நடவடிக்கை என்றுமே அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வந்துள்ளார். நரேந்திர மோடி அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருவதால் இப்படி தங்களைப் பழிவாங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், “இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. இதுபோன்ற போலியான குற்றச்சாட்டுகளைக் கண்டு ஆம் ஆத்மி கட்சியில் யாரும் பயப்பட மாட்டார்கள். கடந்த காலங்களிலும் இதுபோல எங்கள் கட்சித் தலைவர்கள் குறிவைத்துள்ளனர். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். ஊழலுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் எங்கள் போராட்டம் தொடரும்” என்று அவர் தெரிவித்தார்.