தன்னை பெரிய ஆளாக காட்ட முயற்சி செய்கிறார் அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமி

சொத்துபட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை பேசியது, தன்னை பெரிய ஆளாக காட்ட முயற்சி செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாளை (இன்று) அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். முதலில் தர்ம யுத்தம் என்றார். இப்போது மீண்டும் மற்றொரு தர்ம யுத்தம் என்கிறார். அவரது தர்ம யுத்தம் எல்லாம் என்ன ஆனது என்று அவரை சுற்றி இருக்கும் அனைவருக்கும் தெரியும். நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும். வலிமையா இருக்கோம்: அதிமுக இன்று வலிமையாக உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றவர், இப்போது மீண்டும் ஏதோ அதிமுகவை ஒன்றிணைப்பேன் என்றெல்லாம் சொல்லி வருகிறார். சட்டசபைத் தேர்தலில் எங்களால் எங்கும் வெல்ல முடியாது என்று நினைத்து அப்படிச் சொன்னார். ஆனால், நாங்கள் 70+ இடங்களில் வென்றோம். மேலும், இப்போது அதிமுகவுக்கான ஆதரவும் அதிகரித்தே வருகிறது. அதன் காரணமாகவே அவர் இப்படிப் பேசி வருகிறார் அ.தி.மு.க. இன்று வலுவான கட்சியாக உள்ளது. இதனை ஜீரணிக்க முடியாத ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில், மாநாடு நடத்த போவதாக கூறுகிறார். பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், தமிழகத்தில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது. சட்டசபையில் முதல்- அமைச்சர் பேசுவது ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நாங்கள் பேசுவது துண்டிக்கப்படுகிறது. நாங்கள் பேசுவதையும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று பலமுறை கூறிவிட்டோம். இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளார் என்று கேட்கிறீர்கள். அவர் சொத்து பட்டியலை தான் வெளியிட்டு இருக்கிறார். அதனை செய்திதாள்களில் பார்த்து தெரிந்து கொண்டேன். தி.மு.க. சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறி இருக்கிறார். லண்டனில் டி.டி.வி. தினகரனுக்கு சொத்து உள்ளதாக தி.மு.க.வினர் கூறினர். முதலில் அந்த சொத்து பட்டியலைதான் வெளியிட வேண்டும். அண்ணாமலை பேட்டி கொடுத்து தன்னை முன்னிலைப்படுத்தி பெரிய ஆளாக காட்ட முயற்சி செய்கிறார். அவரை பற்றி என்னிடம் தயவு செய்து கேள்வி கேட்காதீர்கள். ஒரு முதிர்ந்த அரசியல்வாதியை பற்றி கேள்வி கேளுங்கள். நான் பதில் கூறுகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.