எனது நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன்: அண்ணாமலை!

திமுக சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை நேரிடையாகவும் அதிமுகவை மறைமுகமாகவும் தாக்கி பேசி வருகிறார். இரு திராவிட கட்சிகளையும் வீழ்த்தி தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அண்ணாமலை இருக்கிறார். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய அமைச்சர்களின் காட்டப்படாத சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அப்போது, தனது வாட்சின் விலை பட்டியலையும் வெளியிட்டார். அந்த வாட்சை அண்ணாமலை புதிதாக வாங்கவில்லை என்றும் கோவையை சேர்ந்த நண்பர் ஒருவரிடம் இருந்து இரண்டாம் முறையாக 3 லட்சம் கொடுத்து வாங்கியதாக அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று ட்வீட் போட்டுள்ள அண்ணாமலை தனது நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்துள்ளார். அதில், ஏப்ரல்14ஆம் தினமான நேற்று, நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் ரசீது, எனது வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு மற்றும் கல்விக் கடன் விவரங்களுடன் திமுகவினரால் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டிருந்தேன்.
அவற்றின் விவரங்கள் https://enmannenmakkal.com என்கிற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.

எனது செயல்களுக்குப் பின்னால் உள்ள நியாயமான காரணங்களை விளக்கி, என் நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன். திசை மாறிச் சென்றுள்ள தமிழக அரசியலில், இதைத் தவிர, வேறு சரியான வழி எனக்குத் தெரியவில்லை. தமிழகத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றமும், அரசியல்வாதிகளிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் வெளிப்படைத்தன்மையும், திமுக போன்ற ஊழல் கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை சாத்தியமில்லை.

திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் மக்களால், மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற பொறுப்பை இனியாவது உணர வேண்டும். எனவே, இன்று முதல், திமுகவிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்புவோம். மக்களுக்கான எங்கள் கேள்விகளுக்கு உரிய பதில்களையும் திமுகவிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்த சூழலில் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து தற்போது அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நோபல் நிறுவனத்தில் 2009ஆம் ஆண்டு இயக்குனராக இருந்திருக்கிறார். அதேபோல் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், நோபல் நிறுவனத்தில் 2016ஆம் ஆண்டு இயக்குனராக இருந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு துபாய் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்திடம் 1000 கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். திமுகவினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி, யாருடையது என்று தமிழக மக்களின் சார்பாக நான் கேள்வி எழுப்புகிறேன். பதில் அளிப்பீர்களா திரு ஸ்டாலின் அவர்களே.?’’ என தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த கேள்வியும் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.