சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க அம்பேத்கர் கூறியதாக நீதிபதி சுவாமிநாதன் கருத்துக்கு, விசிக கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனைச் சுற்றி எப்போதும் சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வழக்கை விசாரித்தபோது, இரண்டு கோயில்களில் அர்ச்சகர் நியமனம் செல்லாது என கூறியவர். அதேபோல் பாரதீய கலாச்சாரத்தை (சனாதன தர்மம்) நாம் இழந்தால், இந்தியா இருக்காது எனவும் பேசியவர். ஆனால் பிறப்பில் உயர்வு தாழ்வு உண்டு என்பதையும், குறிப்பிட்ட சமூகத்தினரே எப்போது உயர் சமூகமாக இருக்க முடியும் என்பதை சனாதன தர்மம் வலியுறுத்துகிறது. ஆனால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரால் பண்படுத்தப்பட்ட மண் தமிழ்நாடு.
இந்தநிலையில் நீதிபதி சுவாமிநாதனின் சமீபத்திய பேச்சும் சர்ச்சையானது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசும்போது, ‘‘தமிழ் மொழி முக்கியம்தான். அதே சமயத்தில் பன்மொழி புலமையையும் நாம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், நமது வாழ்க்கையில் நம்மால் உயர முடியும். மொழி வெறி நம்மை எங்கும் அழைத்துச் செல்லாது. இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் வருவதற்கு ஆதரவளித்தார். எனவே இந்தி, சமஸ்கிருதத்துக்கு எதிரான மனநிலையை நாம் வைத்திருந்தோம் என்றால் அது நமக்கு நல்லதல்ல’’ என்று பேசினார்.
நீதிபதியின் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசராக வேலை பார்த்து வரும் ஜி.ஆர்.சுவாமிநாதன் என்பவர் தொடர்ந்து அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிராகவும், பொய்களை அவிழ்த்து விடுபவராகவும் நடந்து கொள்கிறார். இது அவர் சார்ந்த சாதிக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம்; ஆனால் பதவிக்கு அழகல்ல. பாரதிய தர்மம் என்றும் அது தான் அரசியலமைப்புச்சட்டம் என்றும் நா கூசாது பல பாடி லாங்வேஜோடு கடந்த இரு வாரத்துக்கு முன்பு பேசினார். இப்போது (14.3.2023) புரட்சியாளர் அம்பேத்கர் சமஸ்கிருதமே ஆட்சிமொழியாக்க வேண்டும் என சொன்னதாக மீண்டும் ஒரு அவதூற்றை வீசியுள்ளார்.
அம்பேத்கர் சமஸ்கிருதம் கற்க விரும்பியபோது, மகாராஷ்டிராவில் எந்த ஒரு பிராமண ஆசிரியரும் அவருக்குக் கற்பிக்கத் தயாராக இல்லை என்பதை அறிந்திருந்தார். அவர் மொழியைக் கற்க ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைக்கழகம் வரை செல்ல வேண்டியிருந்தது. அப்படியென்றால், ஒட்டுமொத்த தேசமும் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்ளும் என்று அம்பேத்கர் நினைத்தாரா? என கேள்வி கேட்கும் எழுத்தாளர் காஞ்சா அய்லயா அவர்களுக்கு சுவாமிநாதனிடமிருந்து பதில் இருக்கிறதா?
பாஜக தலைவர் அண்ணாமலை போன்று நீதிபதியாக பணி செய்பவர் போகிற போக்கில் எதையாவது உளறி வைக்கலாமா? புரட்சியாளர் அம்பேத்கரின் சமற்கிருதம் தொடர்பான புரட்டுகளை காஞ்சா அய்லயா கட்டுரை அம்பலப்படுத்துகிறது. நீதிபதியாக வேலை பார்க்கும் நேரத்தை தவிர வேறு நேரமிருந்தால் படித்து பார்க்கவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.