அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது. எங்கள் தலைமையில் தான் கூட்டணி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயக்குமார் கூறியதாவது:-
திமுக என்பது ஒரு ஊழல் கட்சி. திமுகவின் குடும்ப ஆதிக்கத்தில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆ.ரால் தொடங்கப்பட்டது அதிமுக. அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்டு இருக்கிறார். சொத்து பட்டியல் வெளியிடுவதோடு இல்லாமல் அந்த தொகையை அரசு கருவூலத்தில் சேர்த்தால் மக்களின் கஷ்டம் தீர்ந்து விடும். அண்ணாமலை இன்னைக்கு சொல்கிறார். நாங்கள் வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். 500 கோடி ரூபாய் நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது அண்ணாமலை தான். ஆனால் எங்களை தேவையில்லாமல் டச் பண்ணினால் நெருப்போடு விளையாடுற மாதிரிதான். நெருப்போடு விளையாடக்கூடாது.
தெளிர்ந்த நீரோடை போல, திறந்த புத்தகம் போல வெளிப்படையாக எல்லாருடைய சொத்து பட்டியலும் தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கிறோம். இதில் மறைப்பதற்கு எதுவுமே இல்லையே.. அதை தாண்டி எங்களுக்கு சொத்து இருந்தால் பறிமுதல் செய்து கொள்ளுங்கள்.. மடியில் கனம் இருந்தால் பயப்பட வேண்டிய அவசியம் இருக்கும். மடியில் கனம் இல்லாத போது எதுக்கு பயப்பட வேண்டும். சொத்து வைத்திருப்பவர்கள்தான் பயப்பட வேண்டும். அதிமுக பாஜக கூட்டணியில் தான் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியிருக்கிறார். இதில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கு.. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது. எங்கள் தலைமையில் தான் கூட்டணி. அண்ணாமலை எல்லாம் முடிவு செய்ய முடியாது.பாஜகவின் ஆட்சிமன்றக் குழுதான் முடிவு செய்யும். மாநில தலைவரை மாற்றுவதற்கா எங்க கட்சி இருக்கு. எங்க கட்சியில ஆயிரம் வேலை இருக்கு.. மாற்றுவது.. நீடிக்கிறது இதுபற்றியெல்லாம் முடிவு எடுக்க வேண்டியது பாஜகதான். இவ்வாறு அவர் கூறினார்.