ஹிந்தி பாம்பு எப்பொழுது தலைதூக்கினாலும் பெரியாரின் கைத்தடி தயாராக இருக்கிறது: கி.வீரமணி

ஹிந்தி பாம்பு எப்பொழுது தலை தூக்கினாலும் பெரியாரின் கைத் தடி தயாராக இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் சுமார் 85 ஆண்டுகால போராட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட, ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்க்கும் ஒரு போர் ஆகும்! ஹிந்தியைத் திணித்த ஆச்சாரியார் – அதன்பின் அவரை மாற்றம் அடையச் செய்தது திராவிடம்! அன்று ஹிந்தியைத் திணிக்க முயன்ற சி.இராஜகோபாலாச்சாரியார் தன் முடிவைத் தலைகீழாக மாற்றி, மனம் மாற்றிக் கொள்ள வைத்த போராட்டத்தின் வலிவு மிகவும் வியக்கத்தக்கது. காரணம், பெரியாரின், தமிழ்நாட்டின் மாபெரும் தொடர் போராட்டம்! 1938 இல் ஹிந்தியைக் கட்டாயமாக்கிய ஆச்சாரியாரே, 1966 இல் ‘Hindi Never; English Ever’ என்றார். திராவிடர் இயக்கத்தின் தொடர் அரசியல் வரலாற்றில், ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளாக ஹிந்தியைத் திணித்த, திணிக்க முயலும் அகில இந்திய அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாமல், திராவிடக் கட்சிகளின் தோள்களைத் தேடிடும் நிலைக்குரிய காரணங்களில் மிக முக்கியமானது இந்த ஹிந்தித் திணிப்பும் ஆகும்! இந்த வரலாற்றுத் தடங்களையே அறியாமல், ஏதோ தங்களிடம் ஆட்சி சிக்கிவிட்டது என்ற வாய்ப்பில் அமித்ஷாவும், ஆர்.எஸ்.எஸ்.சின் ஆளுமைகளும் ஆழந்தெரியாமல் காலை விட்டுப் பார்த்து, கடிபட்டபின், காலை இழுத்துக் கொள்வது போல ஹிந்திபற்றிப் பேசி, பிறகு பின்வாங்கும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டும் பாடம் கற்க மறுப்பது பரிதாபத்திற்குரியது!

‘திராவிட மாடல்’ ஆட்சியின் முன்னோடி நீதிக்கட்சிக் காலத்திலிருந்தே திராவிட இயக்கம் பற்பல வடிவங்களிலிருந்து வந்த இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி வைத்துள்ளது! ”நீதிக்கட்சியின் பேரன் ஆட்சிதான் தனது தலைமையில் அமைந்த ‘திராவிடர் ஆட்சி”’ என்றார் முதலமைச்சர் அறிஞர் அண்ணா – 1967 இல்! அதன் நீட்சியே இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சி! தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கல்வி வள்ளல் காமராஜர் ஆகியோரும் ஹிந்தித் திணிப்பைக் கடுமையாக எதிர்த்தவர்கள். திடீரென்று புற்றிலிருந்து தலைகாட்டும் நச்சரவம் போல, தயிர் என்பதற்குப் பதிலாக ‘தஹி’ என்று ஆவின் தயிர் விற்கும் அட்டையில் போடுங்கள் என்பதும், மொழிகள் என்ற தலைப்பில் 22 மொழிகளை அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள நிலையில், மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப்.) போன்றவற்றிற்கு தேர்வு வெறும் ஹிந்தி, ஆங்கிலம் மட்டும் என்பதும் நியாயமா? செம்மொழி தமிழிலும் நடத்தவேண்டும் என்று அறிவிப்பு விடுத்தார்; இன்றேல் போராட்டம் வெடிப்பது உறுதி என்றார் நமது முதலமைச்சர்! இன்றைய நாளில், ஒன்றிய அரசு அலுவலகங்களின்முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிக்கை விடுத்து ஆயத்தப்படுத்தினார் தி.மு.க. இளைஞரணி செயலாளர் துடிப்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்! உடனடியாக ஒன்றிய அரசு அதற்கு இசைந்து, மற்ற தாய்மொழிகளிலும் இத்தேர்வை எழுதலாம் என்று கீழே இறங்கி வந்து, முன்பு இரண்டே மொழிகளில் மட்டும் தேர்வு எழுதவிருந்த ஏற்பாடு மாற்றப்பட்டு, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வாய்ப்புக் கதவு ஓசையின்றித் திறக்கப்படக் கூடிய நல்வாய்ப்புக் கிட்டியது.

நமது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும், அதன் ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் ஒரே மாதத்தில் கிடைத்துள்ள 3 ஆவது பெரிய வெற்றி இது! 1. காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட விடுக்கப்பட்ட ஆணையை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது! 2. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய – உயிர்ப் பலியைத் தடுக்கும் ஆன்-லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கான ஒப்புதலைத் தர மறுத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற கடமையாற்றாது காலந்தாழ்த்தும் ஆளுநரின் போக்கைக் கண்டித்து, தி.மு.க. தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் நடத்தவிருந்த மாபெரும் மக்கள் பெருந்திரள் அறப்போரை நடத்துவதற்கு முன்பே, அந்த மசோதாவில் ஒப்புதல் கையொப்பமிட்டு அனுப்பியதால், போராட்டமின்றிய ஒரு வெற்றி! 3. சி.ஆர்.பி.எப். தேர்வு தமிழிலும் நடத்தப்படவேண்டும் என்று தி.மு.க. அறிவித்த போராட்டத்திற்குப் பிறகு, அத்தேர்வினை தமிழ் மொழியில் மட்டுமல்ல, மற்ற மாநில மொழிகளிலும் எழுதிடும் உரிமையைப் பெற்று, மற்ற மாநிலத்தவர்களுக்கும் அகில இந்திய அளவில் பெற்றுத் தந்துள்ளது – ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பலன் தருவதல்லவா?

மொழி என்பது, பண்பாட்டுப் பாதுகாப்பு அரண் அல்லவா! என்றாலும், ஹிந்திப் பாம்பு எப்போது தலைதூக்கி வந்தாலும், பெரியாரின் கைத்தடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்து, அண்ணா, கலைஞர் பீடத்தின்மேல் நின்று எதிர்த்து, அத்தடியால் அப்பாம்பின் தலையில் அடித்து ஓடவிடுகிறார்; எப்போதும் விழிப்போடு நாம் இருந்தே தீரவேண்டும் என்று எச்சரிக்கிறார்! ஒன்றிய அரசு இப்படிப்பட்ட சீண்டல்களில் ஈடுபட்டு, உள்ளிழுப்பு செய்யும் வேலையை விட்டு, ஆக்கப்பூர்வமாக ஆளுமையை அமைத்தலே நன்று என்று கூறி, முடிவை வரவேற்பதுடன், இம்முடிவுகள் வரக் காரணமான முதலமைச்சரையும், திராவிட இயக்கத்தையும், கூட்டணிக் கட்சியினரையும், தமிழ் மண்ணின் சொந்தக்காரர்களையும் வெகுவாகப் பாராட்டி வாழ்த்துகிறோம்!. இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.