மெரினா லூப் சாலையில் 6-வது நாளாக மீனவர்கள் போராட்டம்!

மீனவர்களின் போராட்டத்தால் மெரினா லூப் சாலையில் நேற்று போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கடந்த 12-ந்தேதி நொச்சிக்குப்பம் முதல் பட்டினம்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மீன் கடைகள், உணவகங்களை போலீசார் உதவியுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். மீன் கடைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் வியாபாரிகளும், மீனவ பெண்களும் கடந்த 13-ந்தேதி போராட்டத்தில் இறங்கினர். அப்போது, விற்பனைக்கு வைத்திருந்த மீன், நண்டு ஆகியவற்றை சாலையில் கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். நொச்சிக்குப்பம் முதல் பட்டினம்பாக்கம் வரையிலான மீன்பிடி பகுதிகளை மீன்பிடி மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்தொடர்ந்து, நொச்சிக்குப்பம் – பட்டினம்பாக்கம் வரையிலான 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு லூப் சாலையில் படகை நிறுத்தியும், ஐஸ் பெட்டிகள், மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றை குறுக்கே வைத்தும் நேற்று 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, மீன்பிடி படகிலும், சாலையின் ஓரங்களிலும் கருப்பு கொடியை ஏற்றினார்கள். மேலும், சாலையின் நடுவில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் பந்தல்கள் அமைத்து கூட்டம், கூட்டமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டத்தின் 6-வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மீனவர்களை வி.சி.க. தலைவர் திருமாவளவன் நேற்று இரவு 7 மணியளவில் நேரில் சென்று சந்தித்தார். அப்போது, அவர்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், ‘மீனவர்களை இந்த தொழிலில் இருந்து அப்புறப்படுத்துவது இயற்கைக்கு எதிரானது. மீனவர்களின் உணர்வை புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் எதுவும் அமைந்துவிடக்கூடாது. அதற்கேற்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும். இதே பகுதியில் இவர்களுக்கு கடைகளை கட்டித்தர வேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக வி.சி.க. சார்பில் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்வோம். உரிய முயற்சிகளை அரசு எடுக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.

இந்நிலையில் சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் இடையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாக உயர் நீதிமன்றநீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தனர். அப்போது, லூப் சாலையின்மேற்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அங்கு உள்ள உணவகங்களுக்கு உரிய உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முற்பட்டபோது, சாலையில் மீன்களை கொட்டி,அப்பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரிமீனவர்கள் தரப்பில் இடையீட்டுமனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மீனவர்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டதுதான் லூப் சாலை. இது பொது சாலைஅல்ல. சாந்தோம் சாலை விரிவாக்கப்படும் வரை தற்காலிகமாக பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் என்றுதான் மாநகராட்சி ஏற்கெனவே உத்தரவாதம் அளித்தது. ‘லூப் சாலையை விரிவாக்கம் செய்யக் கூடாது. நடைபாதைகள் அமைக்கக் கூடாது’ என்ற, தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி, இந்த சாலையைமாநகராட்சி விரிவுபடுத்தியுள்ளது” என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி தரப்பில், “மீன்விற்பனையை முறைப்படுத்த கோரியே இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதை மாநகராட்சி முறைப்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:-

லூப் சாலை ஆக்கிரமிப்புகள் கடந்த 12-ம் தேதி முதல் அகற்றப்பட்டு வருகின்றன. அப்பகுதி மீனவர்களின் எதிர்ப்புக்கு நடுவே, 75 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டிக்கடைகள் மட்டுமின்றி, சாலையின் மேற்கு பகுதியில் உள்ள உணவகங்கள், நடமாடும்உணவகங்கள் போன்ற ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 20 உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீன் வாங்க வருவோர் தங்கள் வாகனங்களை கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் பகுதிகளில் நிறுத்துமாறு போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர். மீனவர் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அனுமதி அளித்தால், மீன் சந்தைகட்டுமானப் பணி முடியும் வரை, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலையின் மேற்குபக்கம் உள்ள காலி இடத்தில் கடைகளை அமைத்து, சாலையை ஒழுங்குபடுத்தவும் தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:-

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், கடந்த ஒருவாரமாக சில சுயநலவாதிகளின்தூண்டுதலின்பேரில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சாலையில் போக்குவரத்தை முடக்குவதை சகித்துக் கொள்ள முடியாது. லூப் சாலையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் தடையின்றி செல்ல முடியவில்லை. எனவே, மீனவர்கள் சட்டம் -ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம். நடைபாதையில் உணவு சமைப்பதை தடுக்கவேண்டிய கடமை மாநகராட்சிக்கு இருக்கிறது. இதில் மாநகராட்சி தரப்பில் விடுக்கப்படும் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.