தலித்துகள் மீதான அடக்குமுறைகளை போலீஸ் உடனடியாக நிறுத்த வேண்டும்: சீமான்

பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டியில் தலித்துகள் மீதான அடக்குமுறைகளை போலீசார் உடனடியாக நிறுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள டி.கள்ளிப்பட்டியில் அறிவாசான் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற ஆதித்தமிழ்குடிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தாக்குதலை தடுக்கத் தவறியதோடு, பாதிக்கப்பட்ட ஆதித்தமிழ் குடிகள் மீதே தமிழ்நாடு காவல்துறை தொடர்ச்சியாக கொடுந்தாக்குதலை நிகழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

அமைதி வழியில் அண்ணல் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த தங்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் விதமாகவே ஒரு சிலர் எதிர்வினையாற்றினர். தமிழ்நாடு காவல்துறை அவ்வாறு எதிர்வினையாற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீதுகூட எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு காவல்துறை, ஏதுமறியா ஆதித்தமிழ்க்குடி மக்களை வேட்டையாடுவது போல் ஒவ்வொரு நாளும் தேடித்தேடி கைது செய்து வருவது திமுக அரசின் அதிகார ஒடுக்குமுறையையே வெளிக்காட்டுகிறது. குரலற்ற எளிய மக்களின் குரல்வளையை நெரிப்பதற்கு பெயர்தான் திமுக அரசின் சமூகநீதி போற்றும் திராவிட மாடலா?

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிக்க சென்றதை தவிர அம்மக்கள் செய்த குற்றமென்ன? அதற்குகூட பாதுகாப்பளிக்க முடியாத திமுக அரசின் காவல்துறை, அவர்களை அச்சுறுத்தி அடக்கு ஒடுக்க நினைப்பது எவ்வகையில் நியாயமாகும்? ஆகவே, ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறையை திமுக அரசு கைவிடுவதோடு, கைது செய்துள்ளவர்கள் மீது எவ்வித வழக்கும் பதியாமல் அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.