கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2000 ஆண்டுகளாக சமூக மற்றும் பொருளாதார ரீதியதாக ஒடுக்கப்பட்ட சமூகமாக இருந்த மக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இந்த ஒடுக்கு முறை அடுக்கின் முன்னணியில் இருக்கும் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்திற்கு சென்ற ஆதி திராவிடர் மக்களுக்கு இடஒதுக்கீடு என்பது வழங்கப்படவில்லை. அதாவது இந்த மதங்களில் ஆதி திராவிடர் என்கிற வேறுபாடு கிடையாது என மத்திய அரசு கூறிவருகிறது. இந்த பிரச்னை நாடு முழுவதும் பல்வேறு மதங்களில் இருந்தது. உதாரணமாக சீக்கிய மதங்களில் இந்த பிரச்னை இருந்தபோது அம்மக்கள் போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து சீக்கியர்களாக மாறிய ஆதி திராவிடர் மக்களுக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. அதேபோல பௌத்த மதத்திலும் உள்ள ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்திற்கு சென்ற ஆதி திராவிடர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
எனவே இந்த மதத்தில் உள்ள ஆதி திராவிடர் மக்கள் பட்டியல் சமூகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று கடந்த 2004ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க வேண்டும். வரலாற்று ரீதியாகவே மதம் மாறிய கிறிஸ்தவர்கள் ஆதிதிராவிடர்களாக இருக்கும் போது, அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியாக இருக்கும். அதன் மூலமாக அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். சமூகரீதியாக தரப்பட்ட உரிமைகளை தர மறுப்பது சரியல்ல. சாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம். இதனால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்த சட்டத்தை பாஜக அவையில் கடுமையாக எதிர்த்தது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இதை கடுமையாக எதிர்த்து அவையில் பேசினார். ஆனால் சபாநாயகர் அப்பாவு அவரின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதையடுத்து அவையில் இருந்து வானதி சீனிவாசன் கோபமாக வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் மற்ற 3 பேரும் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானம் ஏனோதானோ என கொண்டுவரப்படவில்லை, இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு, சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசிய பிறகுதான் இதனை முன்மொழிந்திருக்கிறோம். பா.ஜ.க வெளிநடப்பு செய்ததன் மூலம் சரியான தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்பது தெரிகிறது.
மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. (மேசையைத் தட்டும் ஒலி) இத்தகைய சாதி என்பது நீ வேறு: நான் வேறு என்பதாக இல்லாமல், நான் உயர்ந்தவன்: நீ தாழ்ந்தவன் என்ற முறையில் இருக்கிறது. அதாவது படுக்கைக் கோடாக இல்லாமல், செங்குத்துக் கோடாக இருக்கிறது. மொத்தத்தில் அது சமூகக் கேடாக அமைந்துள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி) சாதிய ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த சமூகநீதித் தத்துவத்தை அனைத்து வகையிலும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசினுடைய நோக்கம். (மேசையைத் தட்டும் ஒலி) அந்த வகையில் கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதெல்லாம். 1996. 2006. 2010. 2011 ஆகிய காலக்கட்டங்களில் இதே கோரிக்கையினை நிறைவேற்ற பிரதமருக்கு வலியுறுத்தியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். இந்த தீர்மானம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.