அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சிமன்ற குழு புதிய உறுப்பினர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு மாதம் சிண்டிகேட் குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம். பல்கலைக்கழகம் எடுக்கும் முக்கியமான முடிவுகளுக்கு இந்தக் குழு ஒப்புதல் அளிக்கும். இதனால், பல்கலைக்கழக விவகாரங்களில் சிண்டிகேட் உறுப்பினர் பதவி அதிகாரம் மிக்கது.
அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் அலுவல் சாரா உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அப்போது அறிவித்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலை., சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டு தற்போது ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளன. இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியை உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருவதால் உதயநிதி இந்த சிண்டிகேட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார் உதயநிதி.