உலகம் இன்று போராலும், அமைதியின்மையாலும் தவித்து கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி

உலகம் இன்று போராலும், அமைதியின்மையாலும் தவித்து கொண்டிருக்கிறது. பல நூற்றாண்டுக்கு முன்பே போருக்கான தீர்வை புத்தர் கூறியிருந்தார் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சர்வதேச புத்த கூட்டமைப்புடன் இணைந்து மத்திய கலாசார அமைச்சகம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் சர்வதேச புத்த உச்சி மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இன்று துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைமை பவுத்த துறவிகள், நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொள்கின்றனர். புத்தரின் நினைவுச் சின்னங்கள் பாதுகாத்தல், சிறந்த பவுத்த சிந்தனையாளர்களை ஒரே தளத்தில் கொண்டு வருதல் இம்மாநாட்டின் நோக்கம். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

புத்தரின் உன்னத போதனைகள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற மக்களை பாதித்துள்ளன. மக்கள் தங்கள் நலன்களுடன் நாடு மற்றும் உலக நலனுக்கும் முன்னுரிமை அளிப்பது காலத்தின் தேவையாகிறது. ஏழைகள் மற்றும் வளங்கள் இல்லாத நாடுகளை பற்றி உலகம் சிந்திக்க வேண்டும். புத்தர் காட்டிய வழியை இந்தியா பின்பற்றி வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி உள்பட பல நாடுகளுக்கு உதவி செய்துள்ளோம். ஒவ்வொரு மனிதனின் வலியையும் சொந்தமாக கருதியது.

புத்தரின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைக்க தொடர்ந்து முயற்சி செய்துள்ளோம். நவீன பிரச்சினைகளுக்கு புத்த மதத்தில் தீர்வு இருக்கின்றன. புத்தரின் போதனைகள் உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குகின்றன. உலகம் போர், பொருளாதார ஸ்திரத்தன்மை, பயங்கரவாதம், மதத்தீவிரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை சந்தித்து வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு புத்தரின் கருத்துகள் தீர்வை அளிக்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.