நாட்டின் ஒற்றுமைக்காக உயிரை கொடுக்கக்கூட தயார்: மம்தா பானர்ஜி

நாட்டைப் பிரிக்க விடமாட்டேன், நாட்டின் ஒற்றுமைக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரமலான் நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ரம்ஜான் பண்டிகையையொட்டி கொல்கத்தாவின் ரெட் சாலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய மக்கள் ஒன்றுபட வேண்டும். சிலர் (பா.ஜனதா) வெறுப்பு அரசியலை புகுத்தி நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள். நாட்டுக்காக உயிரை கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நாட்டை பிளவுப்படுத்த எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டேன். மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம். எனது அரசியல் எரிதிகளின் பணபலம் மற்றும் மத்திய ஏஜென்சிகளுக்கு எதிராக நான் போராட தயாராக இருக்கிறேன். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது அரசியல் உள் நோக்கத்துடன் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஆனால் நான் தலைகுனிய மாட்டேன். பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என்று உறுதியளிப்போம். ஜனநாயகத்தை பாதுகாக்க தவறினால் அனைத்தும் முடிந்து விடும்.

யாரோ ஒருவர், பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரிப்பதாகச் சொல்கிறார்கள். முஸ்லீம் வாக்குகளை பாஜகவுக்கு பிரிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை என்பதை நான் அவர்களுக்குச் சொல்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், யார் தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள் என்று பாருங்கள். ஜனநாயகம் ஒழிந்தால் எல்லாம் போய்விடும். இன்று அரசியல் சட்டம் மாற்றப்படுகிறது, வரலாறு மாற்றப்படுகிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வந்தார்கள்; அதை செய்ய விடமாட்டேன் என்று அவர்களிடம் கூறினேன். அதுபோல இந்த நாட்டை பிரிக்கவும் அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.