கேரளா வரும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

கேரளா வரும் பிரதமர் மோடி மீது தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என்று திருவனந்தபுரம் பாஜ மாநில தலைவருக்கு வந்த மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பை மேலும் அதிகரிக்க மத்திய மற்றும் கேரள உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

பிரதமர் மோடி வரும் 24, 25 ஆகிய தேதிகளில் கேரளா வருகிறார். தொடர்ந்து கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையடுத்து கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் பாஜ மாநில அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ‘கேரளாவுக்கு வரும் பிரதமர் மோடி மீது தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதில் மிரட்டல் விடுத்த அமைப்பின் பெயர், விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிகிறது. அந்த கடிதத்தை பாஜ தலைவர் சுரேந்திரன், கேரள டிஜிபி அனில்காந்திடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக ஒரு புகாரும் கொடுத்தார்.

உடனடியாக இதுகுறித்து ஒன்றிய மற்றும் மாநில உளவுத்துறை அமைப்புகள் விசாரணை நடத்தி ஒன்றிய உளவுத்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளன. அதில், பிஎப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவில் ஏற்பட்டுள்ள நிலை மற்றும் கேரளாவில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்று கருதப்படுவதால் அவருக்கு பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய உள்துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் மிரட்டல் கடிதம் குறித்த விவரங்களும் இடம்பெற்று உள்ளன. இது தொடர்பாக கேரள டிஜிபி அனில்காந்த் போலீஸ் உயரதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.