தான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக டுவிட்டர் பதிவு மூலம் பதில் அளித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்ததை விட இந்த ஒரு வருடத்தில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் அதிக பணம் சம்பாதித்ததாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சர்ச்சைக்குரிய அந்த ஆடியோ பற்றி தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். “சமூக வலைதளங்களில் நான் பேசியதாக பகிரப்பட்டு வைரலாகும் ஆடியோ கிளிப் போலியாக ஜோடிக்கப்பட்டது. பொதுத்தளங்களில் கிடைக்கும் தொழில்நுட்பங்கள், அந்த ஆடியோ க்ளிப் நம்பகத்தன்மை கொண்டது அல்ல என்று தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. தற்போது கிடைக்கும் எளிய தொழில்நுட்பத்தின் மூலம் இதுபோன்ற ஆடியோ, வீடியோ இனிவரும் காலங்களில் அதிகம் வெளியானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு நான் ஒருபோதும் எதிர்வினை ஆற்றியதில்லை. இந்த விஷயத்திற்குதான் பதிலளித்துள்ளேன். நான் இங்கே இருப்பதற்கும், என்னுடைய பொதுவாழ்க்கையில் செய்த அனைத்துக்கும் தி.மு.க தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான் காரணம். எங்களைப் பிரிப்பதற்கான முயற்சிகள் எப்போதும் எடுபடாது.” எனத் தெரிவித்திருந்தார்.
தான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக டுவிட்டர் பதிவு மூலம் பதில் அளித்துள்ளார். அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில், “தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரண்டு நாட்களாக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சமூக வலைதளங்களில் அரைகுறையாகக் கூறிவந்ததை படித்துவிட்டு இந்த அறிக்கையாகத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். நிதி அமைச்சர், திமுகவின் ஐடி பிரிவினர் செய்த போலி ஆடியோ பகுப்பாய்வை தன் தற்காப்புக்காகப் பயன்படுத்தியுள்ளார். இது அவரது பலவீனத்தையே காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திமுகவின் ஐடி விங்கைச் சேர்ந்தவர்களைத் தவிர, வேறு யாரும் நிதி அமைச்சரின் இந்தத் தற்காப்பு பதிலை நம்ப மாட்டார்கள். அந்த ஆடியோ பற்றி சுதந்திரமான தடயவியல் ஆய்வுக்கு அழைப்பு விடுப்பதில் இருந்து நிதி அமைச்சரை தடுப்பது எது? எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார் அண்ணாமலை.