12 மணி நேர வேலை: மே 7ஆம் தேதி சீமான் கண்டன ஆர்ப்பாட்டம்!

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பபெறக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழக அரசு, எந்த ஒரு தொழிலாளர்களுடைய எதிர்ப்பை மீறியோ அல்லது கட்டாயப்படுத்தியோய நிச்சயமாக இது நடைமுறைப்படுத்த மாட்டாது. எந்த நிறுவனம், தொழிற்சாலை விரும்புகிறதோ அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தான் நடைமுறைப்படுத்தப்படும். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என நான்கு நாட்கள் 48 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வாரத்தில் மீதியுள்ள 3 நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.

ஆனால், தனியார் முதலாளிகள் மீது நம்பிக்கை இழந்துள்ள தொழிலாளர்கள் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மே 12ம் தேதி தொழிற்சங்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. சென்னையில் நேற்று சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 12 மணிநேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் லாபத் தேவைகளுக்காக, தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை அடகு வைக்க முயலும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப்போக்கைக் கண்டித்தும், தொழிலாளர்கள் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள ‘தொழிற்சாலைகள் சட்டத்திருத்தங்களை’ உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 07-05-2023 அன்று பிற்பகல் 03 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில், எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

மாநிலம் தழுவிய அளவில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாக உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.