பாலியல் புகார் விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி மல்யுத்த வீரர்கள் போராட்டம்!

இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகார் விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜகவைச் சோ்ந்த எம்.பி.யான பிரிஜ் பூஷண் சரண் சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக 12 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தாா். இந்நிலையில் நாட்டின் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் கடந்த ஜனவரி மாதம் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் தொல்லை உள்பட பல்வேறு புகாா்களை கூறி டெல்லி ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதையடுத்து அவரை பதவி விலகுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் வீராங்னைகள் கூறிய பாலியல் தொல்லை புகாா் குறித்து விசாரணை செய்ய பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 போ் குழு அமைக்கப்பட்டது. கடந்த ஜன. 24-ஆம் தேதி மத்திய விளையாட்டு அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் இந்த குழுவை அமைத்தாா். இந்நிலையில் மேரி கோம் தலைமையிலான குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துவிட்டது. ஆனால் இதுவரை அறிக்கை விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது காவல் நிலையத்தில் செய்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், மேரி கோம் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்பட பல்வேறு மல்யுத்த நட்சத்திரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜந்தா் மந்தரில் மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடங்கினா். அவர்களின் போராட்டம் இன்று 2ஆவது நாளை எட்டியுள்ளது. இதுகுறித்து பஜ்ரங் புனியா, கூறியதாவது:-

புகார் அளிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்கும் மேலாகியும், இதுவரை எஃப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த முறை நாங்கள் யாரையும் நிராகரிக்க மாட்டோம், போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்கலாம். எங்களுக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.