திமுக அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர்: எடப்பாடி பழனிசாமி!

புதிதாக லைசென்ஸ் கொடுத்து மது அருந்த அனுமதி அளித்த திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவற்றில் சிறப்பு லைசென்ஸ் பெற்றுக் கொண்டு மது அருந்தலாம் என்று மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, 1981 தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 12 மணி நேரம் வேலை செய்யும் சட்ட முன்வடிவிற்கு எதிராக ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அடுத்தடுத்து போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்களை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில் மது அருந்த சிறப்பு லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ள விவகாரம் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணி நேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறது இந்த திமுக அரசு. இந்நிலையில் இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள்.

மதுவிற்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ளது இந்த திராவக மாடல் அரசு. பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.