காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் மரணம்: துப்பாக்கித் தோட்டாக்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் அமெரிக்காவை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது .

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாடா துரியன் நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. 6 ராணுவ வீரர்கள் பயணம் செய்து வந்த ராணுவ வாகனத்தில் திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தியதோடு ராணுவ வாகனம் மீது கிரெனேட் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் அந்த வாகனம் அங்கேயே தீ பிடித்து உள்ளது. இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் அமெரிக்காவை சேர்ந்தவை ஆகும். அமெரிக்க படைகள் கடந்த வருடம் ஆப்கானிஸ்தானை விட்டு சென்ற போது அங்கே தாலிபானிடம் விட்டுவிட்டு வந்த தோட்டாக்கள் ஆகும் இவை.

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியே செல்லும் போது அங்கே பெரிய அளவில் ராணுவ உபகரணங்கள், ஹெலிகாப்டர்களை கூட விட்டுவிட்டு சென்றது. இதை எல்லாம் தலிபான்கள்தான் கைப்பற்றியது. இதில் தலிபான்கள் கைப்பற்றிய துப்பாக்கி தோட்டங்கள்தான் இந்த தாக்குதலிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்னைப்பர் துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் ஆகும் இவை. தலிபான் அமைப்பிடம் இருந்து லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பிற்கு சென்று அங்கிருந்து ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பிற்கு இந்த தோட்டாக்கள் சென்று இருக்குமோ என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் சீனாவில் இருந்தும் இந்த தோட்டாக்கள் வந்து இருக்குமா.. அமெரிக்கா தோட்டாக்களை போலவே சீனாவின் தோட்டங்களும் இருக்கும் என்பதால் சீனாவின் தயாரிப்பாக இது இருக்குமா என்றும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். அவர்கள் இந்திய ராணுவ வீரர்களின் ஆயுதங்களையும் சம்பவ இடத்தில் இருந்து தூக்கி சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் உள்ளூர் தீவிரவாதிகள் ஈடுபட்டனரா என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இது தொடர்பான தொடர் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.