திருமண மண்டபங்களில் மது வழங்கப்படலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வசூல் வேட்டைக்கு வழி வகுக்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக், நட்சத்திர விடுதிகள், பார்களில் மட்டுமே மது வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி வணிக வளாகம், மாநாட்டு அரங்கம், திருமண மண்டபம், விருந்து அரங்கம், விளையாட்டு அரங்கம் வீட்டுக் கொண்டாட்டங்கள், விழாக்கள், பார்ட்டிகள் போன்றவற்றின் போதும் சிறப்பு உரிமம் பெற்று மது பரிமாறப்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்காக F.L 12 சிறப்பு உரிமத்தை கட்டணம் கட்டி பெற்றுக்கொள்ளலாம் என்றும் டாஸ்மாக் துறை தெரிவித்துள்ளது. முற்றலிலும் லாப நோக்குடன் இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு மது விற்பனையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முற்படுவது சமூக சீர்கெடுக்கு வித்திடும் என்று பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மாதா மாதம் கப்பம் கட்ட வேண்டியுள்ளது என்று பல இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த அறிவிப்பு மூலம் சிறப்பு லைசன்ஸ் பெறுவது முதல் தினசரி மாமூல் வரை பல கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு. மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.