தமிழகத்தில் நவீன வசதிகளுடன் 708 மருத்துவமனைகளை கட்டும் பணியில் தற்போது 500 மருத்துவமனைகள் முடியும் தருவாயில் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியதாவது:-
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது கிடையாது, சிலர் வேண்டுமென்றே மருந்து தட்டுப்பாடு இருப்பதாக கிளப்பி விடுகின்றனர். எந்த அரசு மருத்துவமனை, சுகாதார மையங்களில் மருந்து தட்டுப்பாடு இருந்தால் பொதுமக்கள் தாராளமாக 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அதேபோல், இரவு நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் இயக்கப்படவில்லை என்ற புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கோடைகாலங்களில் பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை பணிகளை முடுக்கிவிட உத்தரவிடப்பட்டுள்ளது. உடலுக்கு கேடு தரும் செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
உடல் உறுப்பு தானங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் அறுவை சிகிச்சை மையத்திற்கு கூடுதல் உபகரணங்கள் வாங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைகள் போன்று தமிழகத்தில் நவீன வசதிகளுடன் 708 மருத்துவமனைகளை கட்டும் பணியில் தற்போது 500 மருத்துவமனைகள் முடியும் தருவாயில் உள்ளது. அந்த 500 மருத்துவமனைகள் இன்னும் 15 நாட்களுக்குள் திறந்து வைக்கப்படும். இதற்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு தினசரி 500 ஆக பதிவாகி வருகிறது. இவ்வாறு அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறினார்.