தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டிப் படுகொலை!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் மணல் கொள்ளை குறித்து போலீஸாருக்கு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் புகார் கூறியதால் அவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி முறப்பநாட்டில் ஆறுகளில் மணல் கொள்ளையடிக்கப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குறிப்பிட்ட சிலர் மீது புகார் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸாரும், வருவாய் துறையினரும் மணல் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தங்கள் மீது புகார் கொடுத்தது லூர்து பிரான்சிஸ் என மணல் கடத்தல் கும்பலுக்கு தெரியவந்தது. இதையடுத்து இன்றைய தினம் மர்மநபர்கள் சிலர் கிராம நிர்வாக அலுவலர் அறைக்கு சென்றனர். அங்கிருந்த லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த லூர்து பிரான்சிஸை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராமசுப்பிரமணியன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதன் பேரில் மற்றவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.