தொழுநோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து கார் மூலம் விழுப்புரம் சென்று கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், வழியில் தொழுநோயாளிகள் மறுவாழ்வு முகாமிற்கு சென்று நலம் விசாரித்தார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசுத் திட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை பற்றி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றும் நாளையும் முதல்வர் ஆய்வு செய்கிறார். இதற்காக காலை 9 மணியளவில் தனது இல்லத்திலிருந்து கார் மூலம் விழுப்புரம் புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், வழியில் பரனூர் தொழுநோயாளிகள் மறுவாழ்வு முகாமிற்கு சென்றார். இந்த நிகழ்வு முதலமைச்சரின் பயண நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை என்றாலும், திடீர் தகவலின் பேரில் அங்கு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகள் திரண்டனர். தொழுநோய் காற்றின் மூலம் வேகமாக பரவக்கூடிய நோய் என்பதால் தொழு நோயாளிகளிடம் இருந்து இரண்டு அடி தள்ளியே நின்று கொண்டார்கள் பல அதிகாரிகள். ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, தொழுநோயாளிகள் அருகிலேயே சென்று அவர்களுக்கு தனது கரங்களால் புத்தாடைகளும், நிதியுதவியும் வழங்கினார். அதைத் தொடர்ந்து விழுப்புரம் புறப்பட்ட அவருக்கு வழிநெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தில், முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி, “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன்படி, விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார். தொடர்ந்து விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு 3 மாவட்டங்களைச் சேர்ந்த அரசுத் துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மற்றும் கள ஆய்வு நடைபெறவுள்ளது.