பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் மறைவையொட்டி நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவரும் அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95), கடந்த சில தினங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் மொகாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கபடும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

5 முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். அவருக்கு வயது 95. பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை பதவி வகித்த முதல்வர்களில் இளம் வயதிலேயே முதல்வர் ஆனவரும் இவர்தான். 43 வயதில் முதல்வரானார். 30 ஆவது வயதில் 1957 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் 1967, 2022 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே அவர் தோல்வியை தழுவியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு எதிரா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறி தனக்கு மத்திய அரசு வழங்கிய பத்ம விபூஷண் விருதையே திருப்பி கொடுத்தார் பிரகாஷ் சிங் பாதல்.