‘மனதின் குரல்’ முக்கிய பிரச்சினைகளை பேசாவிட்டால், அது மவுன குரல் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
பிரதமர் மோடி பதவிக்கு வந்த காலம்தொட்டு ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்னும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுடன் பேசி வருகிறார். இந்த ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி, 100-வது வாரத்தை எட்டியுள்ளது. 100-வது நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
30-ந்தேதியன்று ஒலிபரப்பாகும் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சிக்காக பிரதமரின் வல்லமைமிக்க மக்கள் தொடர்பு எந்திரம், கடுமையாக உழைத்து வருகிறது. ஆனால் அதானி நிறுவனங்கள் விவகாரம், சீன எல்லைப்பிரச்சினை, புல்வாமா-பாலக்கோட் தாக்குதல் பற்றிய காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வெளியிட்ட தகவவல்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சீர்குலைவு உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசாவிட்டால் அது மவுனமான குரல்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.