கெஜ்ரிவால் வீட்டை சீரமைக்க ரூ.45 கோடி செலவு: பா.ஜனதா குற்றச்சாட்டு!

டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து மக்கள் போராடிய நேரத்தில் கெஜ்ரிவாலின் பங்களாவை அழகுபடுத்துவதற்கு ரூ.45 கோடி செலவிடப்பட்டது குறித்து டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் பதில் அளிக்க வேண்டும் என்று பா.ஜனதா கூறியுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு உள்ளார். அதோடு இந்த முறைகேடு தொடர்பாக முதல்-மந்திரி கெஜ்ரிவாலிடமும் சி.பி.ஐ. சமீபத்தில் விசாரணை நடத்தி இருந்தது. டெல்லி மாநகராட்சி தேர்தல் தொடர்பாகவும் இரு கட்சிகள் இடையே கடுமையான மோதல் நிலவியது.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது. டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லம் இருக்கிறது. இந்த பங்களாவை புதுப்பிப்பதற்காக ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காலத்தில் இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்பட்டதாக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது. 2020-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி முதல் 2022 ஜூன் வரை 6 கட்டங்களாக இந்த தொகை செலவிடப்பட்டதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள் கட்டமைப்புக்கு ரூ.11.30 கோடி, கல் மற்றும் பளிங்கு தரைக்கு ரூ.6.02 கோடி, உள் கட்டமைப்பு தொடர்பான ஆலோசனைக்கு ரூ.1 கோடி, மின்சாதனங்கள் மற்றும் இதர உபகரணங்களுக்கு ரூ.2.58 கோடி, அவசரகால தீயணைக்கும் அமைப்புக்கு ரூ.2.85 கோடி, அலமாரி மற்றும் பிற கட்டமைப்புக்கு ரூ.1.41 கோடி, சமையலறை உபகரணங்களுக்கு ரூ.1.1 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட ரூ.9.99 கோடியில் தனித்தொகையான ரூ.8.11 கோடி முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள முகாம் அலுலகத்துக்கு செலவழிக்கப்பட்டுள்ளது. மறு சீரமைப்புக்கு அனுமதிக்கப்பட்ட ரூ.43.70 கோடிக்கு பதிலாக மொத்தம் ரூ.44.78 கோடி செலவிடப்பட்டதாக ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பா.ஜனதாவின் இந்த குற்றச்சாட்டுக்கு டெல்லி அரசிடம் இருந்தோ அல்லது ஆளும் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்தோ எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக பொதுப் பணித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறி இருப்பதாவது:-

முதலமைச்சர் இல்லம் புணரமைக்கப்படவில்லை. பழைய கட்டிடம் இடத்தில் ஒரு புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது முகாம் அலுவலகமும் இந்த இடத்தில் உள்ளது. சுமார் ரூ.44 கோடியில் கட்டுமானம் நடைபெற்றுள்ளது. மேலும் பழைய கட்டிடங்கள் புதிய கட்டிடம் மூலம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து டெல்லி பா.ஜனதா தலைவர் வீரேந்திர சச்தேவா, செய்தி தொடர்பாளர் சமீத்பத்ரா ஆகியோர் கூறியதாவது:-

டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து மக்கள் போராடிய நேரத்தில் கெஜ்ரிவாலின் பங்களாவை அழகுபடுத்துவதற்கு ரூ.45 கோடி செலவிடப்பட்டது. அவரை மகாராஜ் என்று சொல்லும் அளவுக்கு ஆடம்பரமாக பங்களாவை அமைத்துள்ளார். 8 புதிய திரைச்சீலையில் ஒன்றின் அதிகபட்ச விலை ரூ.7.94 லட்சமாகும். ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டது குறித்து டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் பதில் அளிக்க வேண்டும். அவர் ஒரு வீட்டில் வசிக்கவில்லை. ஆடம்பர வீடு (ஷூஷ் மகால்) நிறுவப்பட்டுள்ளது. தார்மீக அடிப்படையில் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டு முன்பு பா.ஜனதாவினர் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டை சீரமைக்க ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டதாக கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது காலணிகளை தூக்கி அவரது வீட்டு முன்பு எறிந்தனர். கெஜ்ரிவாலை திருடன் என்று கூறி கோஷமிட்டனர். அவர்கள் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர். பெருமளவில் பா.ஜனதா தொண்டர்கள் அங்கு குவிந்தனர். போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் தடுப்புகளை அமைத்து இருந்தனர். தடுப்புகளை உடைத்துக்கொண்டு பா.ஜனதா தொண்டர்கள் முன்னேறினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவாலை காங்கிரஸ் விமர்சித்து உள்ளது. அஜய் மக்கான் இதுகுறித்து கூறும்போது, ‘முதல்-மந்திரியின் இல்லத்தை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொது ஊழியராக நீடிக்க கெஜ்ரிவாலுக்கு தகுதியில்லை. கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தேடிக்கொண்டு இருந்தபோது கெஜ்ரிவால் பங்களாவில் செல்வத்தை செலவிட்டுள்ளார்’ என்றார்.