பூஞ்ச் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் மோடி அமைதி காப்பது ஏன்?: பவன் கெரா

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் கடந்த 20ம் தேதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். சம்பவம் நடந்து ஒருவாரம் ஆகிவிட்டது. ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை ஒருவார்த்தைகூட பேசவில்லை; ஒரு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை.

இந்தத் தாக்குதலில் தலிபான்களுக்குத் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த 2021ல் ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறிய பிறகு, அவர்கள் விட்டுச் சென்ற குண்டு துளைக்காத கவச உடையை துளைக்கக்கூடிய தோட்டாக்கள் அவர்கள் மூலம் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய அமைப்புகளுக்குக் கிடைத்துள்ளன.

ஆப்கன் மறுசீரமைப்புக்கான அமெரிக்காவின் சிறப்பு தளபதி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கனின் பல பகுதிகளில் தனது ஆயுதங்களை அமெரிக்கா அப்படியே விட்டு விட்டுச் சென்றதாகவும், இந்த ஆயுதங்களில் பெரும்பாலானவை தலிபான்களுக்குக் கிடைத்ததாகவும், அவற்றை அவர்கள் விற்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆப்கனில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் விட்டுச் சென்ற அமெரிக்க ஆயுதங்கள், ஆயுத கடத்தல்காரர்களுக்கு கை மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் முந்தைய வெளியுறவுக் கொள்கையில் இருந்து வேறுபட்டு, நரேந்திர மோடி அரசு தலிபான்களுடன் இணக்கம் காட்டுகிறது. 2023 பட்ஜெட்டில், ஆப்கானிஸ்தானுக்கு ரூ.200 கோடி நிதியுதவியை மோடி அரசு அறிவித்தது. பூஞ்ச் தாக்குதலில் தலிபான்களுக்குத் தொடர்புள்ள நிலையில், மோடி அரசு தலிபான்களுடன் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொருத்தமானதா? ஜம்மு காஷ்மீரில் 1,249 பயங்கரவாத தாக்குதல்களில் 350 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 569 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். நரேந்திர மோடி அரசு தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மையல்லவா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.