விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரும் கேரளாவில் தங்கி விஏஓ-வை கொலை செய்ய சதி திட்டமிட்டுள்ளனர் என்று நெல்லைச் சரக டிஐஜி பிரவேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்த 55 வயதாகும் லூர்து பிரான்சிஸ் என்பவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தின் விஏஓவாக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் சூசைபாண்டியாபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்கு சென்று வந்தார். செவ்வாய்கிழமையான நேற்று அவர் வழக்கம் போல் அலுவலகத்துக்கு வந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். மதியம் 12 மணியளவில் 2 மர்மநபர்கள் அவரது அலுவலகத்திற்குள் வந்தனர். அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். உடனே அவர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரை சுற்றி வளைத்து வெட்டியிருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து வெளியே ஓடி வந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரும் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வந்த முறப்பநாடு போலீசார் , விஏஓ லூர்து பிரான்சிசை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட விவகாரத்தில் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது. இதற்கிடையே, அகரம் பகுதியில் ஒரு நபர் அரிவாளுடன் சென்ற த நபரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பதும், லூர்து பிரான்சிஸ் கொலை செய்த 2 பேரில் ஒருவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமசுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மாரிமுத்து என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராமசுப்பிரமணியன் மீது மணல் கடத்தல் உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன. அதில் முறப்பநாடு போலீஸ் நிலையத்தில் 8 வழக்குகளும், தூத்துக்குடியில் ஒரு வழக்கும், நெல்லை மாவட்டம் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், சிவந்திப்பட்டி போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும் உள்ளன. மற்றொரு குற்றவாளியான மாரிமுத்துவை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாரிமுத்துவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கு தொடர்பாக நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்த வழக்கில் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரும் கேரளாவில் தங்கி விஏஓ-வை கொலை செய்ய சதி திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமீனில் எளிதில் வர முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக படுகொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் தனக்குப் பணிமாறுதல் கேட்டபோதும், அவருக்கு பணி மாறுதல் வழங்கவில்லை, உரிய பாதுகாப்பும் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு பெண் கிராம நிர்வாக அலுவலர் பேசியதாக ஒரு ஆடியோவும் வெளியானது. அந்த ஆடியோவில், லூர்து பிரான்சிஸ் கொல்லப்பட்டது பற்றி ஆதங்கத்துடன் பேசும் பெண் விஏஓ ஒருவர், “லூர்து பிரான்சிஸை ஆதிச்சநல்லூரில் வெட்டியபோதே விஏஓ சங்கத்தினர் மாவட்ட கலெக்டரை சென்று பார்த்து முறையிட்டோம். கலெக்டரிடமே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தூத்துக்குடி வட்டாரத்திற்கு டிரான்ஸ்பர் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால், அப்போது காலி இடம் இல்லை என மாவட்ட ஆட்சியர் கூறிவிட்டதாக ஆடியோ முடிகிறது.