திபெத்திய பெளத்த மதகுரு தலாய் லாமாவுக்கு 1959-ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது 64 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நேரில் வழங்கப்பட்டது.
பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரமோன் மகசேசேவின் மக்கள் சேவை, நல்ல நிா்வாகம், நடைமுறைக்கு உகந்த லட்சியவாதம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், ராக்ஃபெல்லா் பிரதா்ஸ் நிதி அறக்கட்டளை மற்றும் பிலிப்பின்ஸ் அரசால் ரமோன் மகசேசே விருது தோற்றுவிக்கப்பட்டது. கடந்த 1958-ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆசியாவின் நோபல் விருதாக கருதப்படும் ரமோன் மகசேசே விருது, 1959-ஆம் ஆண்டு தலாய் லாமாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது அவரால் அந்த விருதை நேரில் பெற முடியவில்லை.
இந்நிலையில், ஹிமாசல பிரதேசத்தின் தா்மசாலா நகரில் உள்ள தலாய் லாமா வீட்டில், அவரிடம் 64 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று புதன்கிழமை விருது ஒப்படைக்கப்பட்டது. ரமோன் மகசேசே விருது அமைப்பின் உறுப்பினா்கள் விருதை வழங்கினா்.
இதுதொடா்பாக தலாய் லாமா அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:-
புனிதமான பெளத்த மதத்தைக் காக்கும் திபெத் சமூகத்தின் துணிச்சலான போராட்டத்தில் தலாய் லாமாவின் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் நோக்கில், அவருக்கு ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது. இது அவருக்கு அறிவிக்கப்பட்ட முதல் சா்வதேச விருது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.