வீடுகள் கட்டும் திட்டத்தில் அதிமுக ஆட்சியில் இமாலய ஊழல்: அன்பில் மகேஷ்

கடந்த அதிமுக ஆட்சியில் 5 லட்சத்து 9 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

கடந்த முறை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் 3 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி சென்று உள்ளார்கள். அவர்கள் ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. அதிமுக ஆட்சியின்போது கல்வித்துறையில் வீண் செலவுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒரு அரசு நிர்வாகம் எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியே ஒரு உதாரணம். திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன.

அதிமுக ஆட்சியில் 1.75 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமலேயே சென்றுவிட்டார்கள். அதற்கு பிறகு கொரோனா காலம் வந்தது. சீனாவிலிருந்தே நிறைய மடிக்கணினிகள் வாங்க வேண்டி இருந்தது.
மடிக்கணினி பற்றாக்குறை இருந்தது. இன்றும் பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்து இருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரியவந்து உள்ளது. பழங்குடியினருக்காக கட்டப்பட்ட 60 சதவீத வீடுகள் அந்த சமூக மக்களுக்கு சென்றடையவில்லை. முறைகேடாக 3,354 வீடுகள் அதிமுக ஆட்சியில் தகுதியே இல்லாத பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளதை சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது. பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீடுகளை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் பட்டியல், பழங்குடியின மக்களை எந்த அளவுக்கு வஞ்சித்து இருக்கிறார்கள் என்பதை நான் சொல்ல முடியும்.

நாகை மாவட்டத்தில் இருக்கிற எஸ்.சி வகுப்பைச் சேர்ந்த பயனாளிக்கு வழங்க வேண்டிய வீட்டை பிற்படுத்தப்பட்ட பயனாளிக்கு வழங்கி உள்ளார்கள். திருச்சியைச் சேர்ந்த பயனாளியின் வீடு லக்னோவில் இருப்பதாக காட்டுகிறது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளியின் வீடு வங்காள விரிகுடாவை காட்டுகிறது. இப்படி இந்த திட்டத்தை அலட்சியமாக கையாண்டு இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. கிட்டத்தட்ட 3,354 வீடுகள் இதுபோல் முறைகேடாக உள்ளது. சுமார் 50 கோடிக்கும் அதிகமான தொகை முறைகேடாக செலவு செய்யப்பட்டு உள்ளதை அழகாக சொல்கிறது. நமது அரசாங்கம் வந்த பிறகு முதல் முறையாக மத்திய அரசிடம் இருந்து ரூ.2,492 கோடியை வீடு கட்டுவதற்காக பெற்று உள்ளது. மத்திய அரசு தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து உள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள். உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தனியாக குழு அமைத்து, கடந்த ஆட்சியில் தவறு இருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.