தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்காசியில் நடைபெறும் கனிமவளக்கொள்ளையை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-
தென்காசி மாவட்டத்தில் கட்டுக்கடங்காத அளவில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தமிழ்நாடு அரசு கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அரிய இயற்கை வளங்களை அற்ப லாப நோக்கத்திற்காக அரசே கூறுபோட்டு விற்பதென்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம், கடையம், முக்கூடல் ஆகிய பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரிகளிலிருந்து 1500க்கும் மேற்பட்ட பார உந்துகளில் நாள்தோறும் கேரளாவுக்குக் கனிமவளங்கள் கடத்தப்படுகின்றன. மீட்டுருவாக்கம் செய்ய முடியாத இயற்கையின் அருட்கொடையாம் மலைகளை அழித்தொழித்துக் கனிம வளங்களைக் கடத்துவதை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் முதன்மையான கோரிக்கையாகும். ஆனால் கனிம வளங்களைக் கடத்த அரசு அனுமதித்த இருபது டன் எடையை விடவும் அதிகமாக, ஐம்பது டன் அளவிற்கு அதிகாரிகளின் துணையுடன் முறைகேடாகக் கனிமவளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுகின்றன. இதனால் தென்காசி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மிக வேகமாக நாசமாக்கப்படுவதோடு, இயற்கை வளமும் அழியும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அளவுக்கதிமான கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு கண்மூடித்தனமாகச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், சாலைகள் பழுதாவதும், குடிநீர் குழாய்கள் உடைபடுவதும், பறக்கும் தூசியால் மக்களுக்கு நுரையீரல் பாதிப்புகளும் ஏற்படுகிறது. மேலும், சாலை நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, தமிழ்நாடு அரசு தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தமிழ்நாடு அரசு முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், பள்ளி-கல்லூரி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.