கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை: அண்ணாமலை

முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் பிபிஜி சங்கர்(42), இவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார். நேற்று காலை சென்னைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு தனது காரில் டிரைவருடன் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது காரை வழிமறித்த மர்ம கும்பல் காரின் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டு வீசியதையடுத்து காரின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. தன்னை கொலை செய்ய வந்துள்ளார்கள் என்பதை அறிந்து உயிரை கையில் பிடித்து கொண்டு உயிர் பிழைக்க காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடினார். அங்கும் மறைந்திருந்த மர்ம கும்பல் விடாமல் விரட்டி சென்று பிபிஜி சங்கரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் பிபிஜி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலைக்கான காரணம் என்ன, தொழில் போட்டியா, அரசியல் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழ்நாடு பாஜக பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கர் அவர்கள், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.
காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.