மல்யுத்த வீரர்கள் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக எழுந்தது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட வேண்டும் எனக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது டெல்லி காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “மல்யுத்த வீரர்களின் புகார் குறித்து அவர்களுடன் இதுவரை 12 மணி நேரம் பேசியுள்ளேன். அவர்களின் குறைகளை தெரிவிக்க அனைத்து விதமான வாய்ப்புகளையும் வழங்கியுள்ளோம். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான விசாரணை பாரபட்சமற்ற முறையில் நிச்சயம் நடத்தப்படும்” என்று கூறினார்.
மல்யுத்த வீரர்களின் போராட்டம் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழு கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மல்யுத்த வீரர்கள் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்துவது ஒழுக்கமற்ற செயல். இது இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது” என்றார்.